தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை அவமதித்த ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாடு சட்டப் பேரவையையும், தமிழக மக்களையும் தமிழ்நாடு ஆளுநர் மேதகு ஆர்.என். ரவி அவர்கள் அவமதித்து இருக்கிறார். அவர் இனியும் அந்தப் பதவியில் நீடிப்பது  முறையல்ல. எனவே, இந்திய ஒன்றிய அரசு அவரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

சட்டப் பேரவையில் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியது ஆளுநரின் பணி. ஆனால் நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் நான்கு மாதங்களுக்கு மேலாக அவர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இந்நிலையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு குடியரசுத் தலைவரிடம் இதுகுறித்துப் புகார் அளித்தது. இந்திய உள்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து அதைப் பற்றிப் புகார் அளித்தனர். அதன் பிறகும் கூட ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இந்த மசோதாவுக்கு எதிரான  கருத்துக்களைப் பொது வெளியில் தெரிவித்தார். 

நேற்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் திரு. டி. ஆர். பாலு அவர்களும் நீட் விவகாரம் தொடர்பாகப்  பேசியதற்குப் பிறகு இந்த சட்ட மசோதாவை அவர் திருப்பி அனுப்பி இருக்கிறார். இது தமழினத்துக்கு எதிரான அவரது உள் நோக்கத்தைக் காட்டுகிறது. எனவே, அவர் இனியும் அந்தப் பதவியில் நீடிப்பது முறையல்ல. அவரை இந்திய ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

நீட் தேர்வால் ஏழை , கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஏ. கே.ராஜன் குழு கண்டறிந்துள்ள உண்மைகளை ஆளுநர் எதைக்கொண்டு மறுக்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மீண்டும் இதே சட்ட மசோதாவை  நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan statement for neet issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->