துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலும் இல்லை... அமைச்சர்களிடம் பொறுப்பும் இல்லை...! - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி தாக்கு
There are no answers departmental questions Ministers have no responsibility Udhayanidhi Stalin sharp attack Assembly
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய முக்கிய கேள்விகளுக்கு அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"மாணவர் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மிகவும் முக்கியமான விவகாரங்கள் குறித்து சட்டசபையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், அவற்றுக்கு அரசு தரப்பில் எதிர்பார்த்த அளவுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை.
மாணவர்கள் கொலை தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முறையான பதிலை அளிப்பதற்கு பதிலாக, திமுக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எந்தப் பிரச்சினை எழுந்தாலும், அதற்கு திமுகதான் காரணம் என்பது போல அரசு தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே புரியாத நிலை உள்ளது. அந்தந்த துறைகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டபோதும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உரிய பதில்களை வழங்கவில்லை.
துறை சார்ந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதில் அளிக்க வேண்டிய நிலையில், அதுவும் நடைபெறவில்லை.குறிப்பாக, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான முக்கியமான விவகாரங்கள் சட்டசபையில் விவாதிக்கப்படும் நிலையில், அதற்கு பொறுப்பான அமைச்சர் இன்று சட்டசபைக்கு வரவில்லை.
இதுபோன்ற சூழலில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்." என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
There are no answers departmental questions Ministers have no responsibility Udhayanidhi Stalin sharp attack Assembly