அடுத்த அதிமுக விக்கெட்?அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த லீமா ரோஸ் மார்ட்டின்! ஆதவ் மாஸ்டர் பிளான்!அதிர்ச்சியில் இபிஎஸ்!
The next AIADMK wicket Lima Rose Martin met Minister Sengottaiyan Aadhav master plan EPS in shock
லால்குடி தொகுதியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின், தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆறு அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சி மாறியுள்ளனர்.
மேலும், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து மொத்தம் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, ஆளும் தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இதற்கிடையில், லால்குடி தொகுதி எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்ட்டின் நேற்று தலைமைச் செயலகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர் அமைச்சர் செங்கோட்டையனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த சந்திப்பின் நோக்கம் குறித்து அமைச்சர் தரப்போ, எம்.எல்.ஏ தரப்போ எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.
அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து, பின்னர் அமைச்சரவையில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அவரை அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அதே நேரத்தில், அண்மையில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய லீமா ரோஸ் மார்ட்டின், "எனக்கு வாய்ப்பு அளித்து எம்.எல்.ஏவாக ஆக்கியது அதிமுக. எந்தச் சூழலிலும் கட்சியை விட்டு விலக மாட்டேன். கட்சிக்கும் அதன் தலைமையுக்கும் தொடர்ந்து உண்மையாக இருப்பேன்" என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
இதனால், அமைச்சர் செங்கோட்டையனுடன் நடைபெற்ற சந்திப்பு அரசியல் ரீதியானதா அல்லது தொகுதி தொடர்பான நிர்வாக ஆலோசனையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
English Summary
The next AIADMK wicket Lima Rose Martin met Minister Sengottaiyan Aadhav master plan EPS in shock