லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்..!
The Madras High Court has imposed an interim stay on the dismissal of anti corruption investigator Vimala
தமிழக காவல் துரையின் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் விமலா பணி இடைநீக்கம் செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது என கூறி, அவரது பணியிடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஆலந்தூரில் உள்ள தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் விமலா. இவர் கடந்த 17-ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை பெருநகரக் காவல் துறையில் பாலியல் தடுப்பு பிரிவுகாவல் ஆய்வாளராக பணியாற்றிய ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ததன் காரணத்துக்காக, லஞ்சஒழிப்புத் துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் தன்னை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விமலா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.அய்யாத்துரையும், எதிர்மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் வி.சிவலிங்கமும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா; நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்ததில், காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கடந்த ஜனவரி 06-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மனுதாரர் விமலா, சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு எதிராக வரைவு எஃப்ஐஆர் தயாரித்து, இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். அதில் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. சில திருத்தங்களை செய்து ஒப்புதல் அளித்த பிறகே மனுதாரர் அந்த எஃப்ஐஆரை கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி பதிவு செய்துள்ளார்.
ஆனால், சக காவல் ஆய்வாளர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தார் என்ற காரணத்துக்காக மனுதாரரை இடைநீக்கம் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆகையால், அவரது இடைநீக்கத்துக்கு ஜூலை 09-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கிறேன் என்றும், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆஷா உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
English Summary
The Madras High Court has imposed an interim stay on the dismissal of anti corruption investigator Vimala