களமே மாறுது.. அவுட்டான தவெக! ரெண்டுபேருக்குத்தான் போட்டியே..திமுக vs அதிமுகதான்..விஜய்க்கு போன வார்னிங்!
The field is changing Tvk is out It a contest between two people DMK vs AIADMK Warning to Vijay
2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 12 வாரங்களே உள்ள நிலையில், திராவிட அரசியலுக்கு மாற்றுச் சக்தியாகக் கருதப்பட்ட நடிகர் விஜயின் “விஜய் அலை” தற்போது மெல்ல மங்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு வாரங்களாக தமிழக வெற்றி கழகத்தின் (TVK) அரசியல் செயல்பாடுகள் கணிசமாகக் குறைந்துள்ளதையும், சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அதையே பிரதிபலிப்பதையும் பார்க்க முடிகிறது.
கடந்த மாதம் ஈரோடு கூட்டத்தில் பங்கேற்ற விஜய், அதன்பின் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொண்டார். அதன் பிறகு, கடந்த ஒரு மாதமாக எந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளிலும் அவர் நேரடியாக பங்கேற்கவில்லை. ‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டாலும், அது அரசியல் மேடையாக இல்லை என்பதால், அரசியல் ரீதியாக விஜய் கிட்டத்தட்ட “சைலன்ட் மோடில்” இருப்பதாகவே கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில், தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளும் பெரிதாக வெளிப்படாமல் அமைதியாகவே இருந்து வருகின்றன.
இந்த நிலைக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுவது கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ (CBI) விசாரணை. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் இரண்டு முறை விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சூழல் உருவானது. இதனால் கட்சி ஒருங்கிணைப்பு, தேர்தல் தயாரிப்பு போன்ற பணிகளில் கவனம் செலுத்த முடியாமல், விஜய் தனது நேரத்தை சட்ட ஆலோசகர்களுடனும் டெல்லி பயணங்களிலுமே செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு மேலாக, விஜயின் அரசியல் பயணத்தில் முக்கிய ஆயுதமாகக் கருதப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளன. தணிக்கை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ளதால், இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படம் அரசியல் ரீதியாக பயன்படுத்தப்படும் என்ற திட்டம் தற்காலிகமாகவேனும் முடங்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், டிசம்பர் மாதம் வரை நகர்ப்புறங்களிலும் முதல்முறை வாக்காளர்களிடமும் திமுகவுக்கு இணையாகவோ அல்லது சில இடங்களில் முன்னிலையிலோ இருந்ததாகக் கூறப்பட்ட விஜயின் ஆதரவு, தற்போது குறைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிராக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, நலத்திட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவுடன் இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்க்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துவர்கள் வாக்குகளும், மீண்டும் திமுக பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளன என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
மற்றொரு பக்கம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சிதறிய அணிகளை ஒன்றிணைத்து வலுவான எதிர்க்கட்சியாக மீண்டும் உருவெடுத்து வருகிறது. அமமுக (டிடிவி தினகரன்) அணியின் வருகை, அந்தக் கூட்டணிக்கு கூடுதல் பலமாக மாறியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதன் அடிப்படையில், தமிழக அரசியல் களம் மீண்டும் திமுக – அதிமுக என்ற பாரம்பரிய இருமுனைப் போட்டிக்கே திரும்பி வருவதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு வரை மும்முனைப் போட்டியாகத் தோன்றிய களம், தற்போது பழைய திராவிடக் கட்சிகளுக்கிடையிலான நேரடி யுத்தமாக மாறிக் கொண்டிருக்கிறது. விஜய் “TVK vs DMK” என்ற போட்டியை முன்வைத்தாலும், நடைமுறை அரசியல் நிலவரம் “ADMK vs DMK” என்றே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தச் சவால்களிலிருந்து விஜய் மீண்டு வந்து, மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் இறங்காவிட்டால், 2026 சட்டசபைத் தேர்தல் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கிடையிலான நேரடி அரசியல் மோதலாகவே மாறும் எனக் கணிக்கப்படுகிறது. அந்தச் சூழலில், தமிழக வெற்றி கழகம் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இல்லாமல், வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாக மட்டுமே மாறும் அபாயமும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
English Summary
The field is changing Tvk is out It a contest between two people DMK vs AIADMK Warning to Vijay