இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ...? பண்ருட்டி விவசாயி எரிப்புச் சம்பவத்தைக் கண்டு கொதிக்கும் இ.பி.எஸ்...!
What other atrocities yet unfold EPS seething anger after witnessing incident farmer being set ablaze Panruti
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நிகழ்ந்த கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து அனல் பறக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிகழ்வு தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
"உடல் முழுவதும் தீப்பற்றி எரிய, அந்த முதியவர் சாலையில் அலறியபடி ஓடிய காட்சி, இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாகச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு ஒரு பயங்கர சாட்சியாக இருக்கிறது" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் "இன்னும் என்னென்ன கொடுமைகளைச் சந்திக்கப் போகிறோமோ?" என்ற மரண பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
"சட்டம்-ஒழுங்கு இதற்கும் மேலாகச் சீர்கெட வாய்ப்பே இல்லை என்று நினைக்கும் போதெல்லாம், அதைவிடப் பயங்கரமான குற்றங்கள் இந்த ஆட்சியில் அரங்கேறுகின்றன" என்று அவர் சாடியுள்ளார்.
தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டுமல்ல, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பும்தான் என அவர் தனது அறிக்கையில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்ட கயவர்களை உடனடியாகக் கைது செய்து, பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், படுகாயமடைந்த விவசாயிக்குத் தடையற்ற உயர்தர மருத்துவச் சிகிச்சை அளிக்க இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது அறிக்கையின் வாயிலாக எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசை எச்சரித்துள்ளார்.
English Summary
What other atrocities yet unfold EPS seething anger after witnessing incident farmer being set ablaze Panruti