புதுச்சேரியில் இன்று முதல் பூக்களின் அணிவகுப்பு! - 36-வது மலர் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ரங்கசாமி
parade flowers begins Puducherry from today CM Rangasamy inaugurates 36th Flower Exhibition
புதுச்சேரி அரசின் வேளாண்துறை சார்பில் நடத்தப்படும் வண்ணமயமான 'வேளாண் விழா 2026' மற்றும் 36-வது மலர், காய், கனி கண்காட்சி இன்று மாலை 5 மணிக்குத் தாவரவியல் பூங்காவில் (Botanic Garden) கோலாகலமாகத் தொடங்குகிறது.
இந்த மலர் திருவிழாவைப் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைக்கின்றனர். இவ்விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்.

இன்று முதல் மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெறும் இக்கண்காட்சியில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையில் அரிய வகை மலர்ச் செடிகளும், விதவிதமான காய், கனி ரகங்களும் அணிவகுக்கின்றன. பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான செடிகளை அங்கேயே விலைக்கு வாங்கிச் செல்லும் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
விழாவின் இறுதி நாளான நாளை மறுநாள் மாலை, பல்வேறு போட்டிகளில் வென்ற சாதனையாளர்களுக்கும், 'மலர் ராஜா', 'மலர் ராணி' பட்டம் வெல்பவர்களுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
மலர் கண்காட்சியையொட்டித் தாவரவியல் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்துப் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சரண்யா சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இருசக்கர வாகனங்கள் பழைய பஸ் நிலையம் மற்றும் நகராட்சி வளாகத்திலும், ஓட்டுநர்கள் மூலம் இயக்கப்படும் நான்கு சக்கர வாகனங்கள் பழைய துறைமுகப் பகுதியிலும், உரிமையாளர்களே ஓட்டிவரும் கார்கள் அண்ணா திடலிலும் நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
parade flowers begins Puducherry from today CM Rangasamy inaugurates 36th Flower Exhibition