29 நாட்களில் 34 ஆயிரம் ரூபாய் உயர்வு! - தங்கம் விலை வரலாற்றில் ஒரு கறுப்பு ஜனவரி; உச்சத்திலிருந்து இன்று சற்றே ஓய்வு
34000 rupees 29 days black January history gold prices slight respite today after reaching peak
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளி விலையானது கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளம் போலப் பாய்ந்து, சாமானியர்களைத் திகைக்க வைத்துள்ளது. ஜனவரி தொடக்கத்தில் சவரன் ரூ.99,520 என இருந்த தங்கம், அடுத்தடுத்த நாட்களில் 'டாப் கியரில்' எகிறி புதிய வரலாற்று உச்சங்களைத் தொட்டது.

குறிப்பாக, ஜனவரி 12-க்குப் பிறகு தங்கம் ஆடிய ருத்ரதாண்டவம் நடுத்தர வர்க்கத்தினரின் கனவில் பேரிடியாக இறங்கியது. கடந்த இரு தினங்களில் மட்டும் விலையேற்றம் ஜெட் வேகத்தில் இருந்தது; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 வரை உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1.25 லட்சத்தை எட்டிப்பிடித்த நிலையில், நேற்று (ஜனவரி 29) மேலும் ரூ.9,520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,34,400 என்ற மலைக்கவைக்கும் விலைக்கு விற்பனையானது.
இந்த ஆண்டின் கடந்த 29 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.34,880 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தத் தொடர் விலை ஏற்றத்திற்குச் சற்று முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று (ஜனவரி 30) தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து நிம்மதி அளித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் பின்பற்றி வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.415-க்கு விற்பனையாகிறது.
English Summary
34000 rupees 29 days black January history gold prices slight respite today after reaching peak