அதிரும் கேரளம்! 4.54 கிலோ தங்கம் எங்கே? - சபரிமலை தந்திரியைத் தொடர்ந்து நடிகர் ஜெயராம் வரை நீளும் விசாரணை வளையம்
Where 4point54 kg gold investigation net extends from Sabarimala tantri actor Jayaram
சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையில் உள்ள துவார பாலகர் சிலைகள் மற்றும் நிலைக்கதவுகளில் இருந்த பல கிலோ தங்கம் மாயமான விவகாரம், தற்போது தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயராம் வரை நீண்டு, கேரளாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

2019-ஆம் ஆண்டு புனரமைப்புப் பணிகளுக்காகச் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்தத் தங்கக் கவசங்களில், சுமார் 4.54 கிலோ தங்கம் குறைந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, கேரள உயர் நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது. விசாரணையில், சீரமைப்புப் பணியின் போதே தங்கம் திட்டமிட்டுச் சூறையாடப்பட்டது அம்பலமானது.
இந்த மெகா மோசடி தொடர்பாகத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு மற்றும் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு உள்ளிட்ட 11 முக்கியப் புள்ளிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
இதற்கிடையே, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை (ED) கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 21 இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் சிக்கின.
இந்நிலையில், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான உன்னிகிருஷ்ணனுடன் நடிகர் ஜெயராமுக்கு உள்ள நெருக்கம் குறித்துச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.
மாயமான தங்கக் கவசங்கள் மற்றும் தகடுகள், ஜெயராமின் வீட்டில் வைத்துப் பிரத்யேகமாகப் பூஜை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியானதே இந்த விசாரணைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
கடந்த 40 ஆண்டுகளாகச் சபரிமலைக்குச் செல்லும் தனக்கு உன்னிகிருஷ்ணன் பழக்கமானவர் என்றும், வீட்டில் வைத்துப் பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்ற நம்பிக்கையிலேயே அத்தகு செயலில் ஈடுபட்டதாகவும் ஜெயராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடிகர் ஜெயராமை இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்க முடிவு செய்துள்ள அதிகாரிகள், அவரிடம் விரிவான வாக்குமூலத்தைப் பதிவு செய்திருப்பது இந்தத் தங்கக் கொள்ளை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Where 4point54 kg gold investigation net extends from Sabarimala tantri actor Jayaram