அதிமுகவில் மெல்ல எழும் குழப்பம் – கூட்டணியா, கட்சி அடையாளமா? அதிமுக அடையாளம் தேய்கிறதா? ரத்தத்தின் ரத்தங்கள் ஆதங்கம்!
The confusion slowly emerging in the AIADMK alliance or party identity Is the AIADMK identity fading Blood is the blood of blood
மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைவர்கள் ஒரே மேடையில் கைகோர்த்து தோன்றியது, அரசியல் ரீதியாக பெரும் கவனம் பெற்றது. மேடையில் அண்ணன்–தம்பி–பங்காளி பாசம் போல காட்சிகள் அரங்கேற, வெளிப்படையாக எந்தவித முரண்பாடும் இல்லை என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த ஒற்றுமை காட்சியை அதிமுகவின் ஒரு தரப்பு ரசிக்கவில்லை என்பதே தற்போதைய அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது.
அதிமுகவில் இன்னமும் பாஜகவை மனப்பூர்வமாக ஏற்காத தொண்டர்கள் கணிசமான அளவில் உள்ளனர். திராவிட அடையாளம், கட்சியின் சொந்த கொள்கைகள், அண்ணா–எம்ஜிஆர் மரபு ஆகியவற்றை மதித்து அரசியல் செய்ய வேண்டும் என்பதே இந்த “ரத்தத்தின் ரத்தங்கள்” என அழைக்கப்படும் தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. அரசியல் சூழல் காரணமாக கூட்டணி அவசியம் என்றாலும், அதிமுக தனது தனித்துவத்தை இழக்கக் கூடாது என்பதே அவர்களின் முதன்மை கவலை.
நேற்றைய மதுராந்தக கூட்டம், பெயரளவில் என்டிஏ கூட்டமாக இருந்தாலும், நடைமுறையில் முழுக்க முழுக்க பாஜக மேடையாகவே தெரிந்ததாக சில அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “மேடையில் பாஜக தாமரை கொடிகளும், தொண்டர்கள் கையில் இருந்த பாஜக சின்னங்களுமே அதிகமாகத் தென்பட்டன. அதிமுகவின் இரட்டை இலை சின்னம், அந்த அளவுக்கு காட்சியளிக்கவில்லை” என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் பிரதமர் மோடியின் உரை பற்றியும் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். “பாஜகவின் என்டிஏ அரசு”, “டபுள் என்ஜின் அரசு” போன்ற வார்த்தைகளே உரையில் அதிகம் இடம்பிடித்தன. இது, திராவிட சிந்தனையை மதிக்கும் பல அதிமுக தொண்டர்களுக்கு, ‘தமிழகத்தில் ஒருவேளை பாஜக நேரடியாக ஆட்சி நடத்தப்போகிறதா?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறினர். அதிமுக எப்போதும் தனித்துவமாகவும் வலுவாகவும் ஆட்சி நடத்த வேண்டும்; இல்லையெனில் அது பாஜக கண்காணிப்பில் இயங்கும் ஆட்சியாகவே தோன்றும் என்றும், அப்படி நடந்தால் எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் ரீதியான வாய்ப்பை உருவாக்கி தரும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த குழப்பத்திற்கு இன்னொரு காரணமாக, முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தையும் தொண்டர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். “எடப்பாடி பழனிசாமியை இதுவரை அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ மேடையில் தெளிவாக அறிவிக்கவில்லை. டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்கள் எடப்பாடியை ஏற்றுக்கொண்டாலும், பாஜக தலைமை அந்த வார்த்தையைச் சொல்லாதது குழப்பத்தை அதிகரிக்கிறது” என அவர்கள் கூறுகின்றனர்.
“அதிமுக என்ற கட்சி, பாஜக நிழலில் தான் நிற்க வேண்டுமா, அல்லது தனது சொந்த அரசியல் அடையாளத்துடன் முன்னேறுமா?” என்ற கேள்விக்கான தெளிவான பதில் தேவை என்பதே தொண்டர்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது. கூட்டணி அரசியல் அவசியம் என்றாலும், அதிமுக தனது திராவிட அடையாளத்தையும், தனித்துவத்தையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
இந்த குழப்பத்துக்கு முடிவு கட்ட வேண்டிய பொறுப்பு முழுமையாக அதிமுக மேலிடத் தலைமைக்கே இருப்பதாக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். அந்தத் தெளிவு கிடைத்தால்தான், தொண்டர்கள் மனநிம்மதியுடன் களத்தில் இறங்கி தேர்தல் பணிகளைச் செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
English Summary
The confusion slowly emerging in the AIADMK alliance or party identity Is the AIADMK identity fading Blood is the blood of blood