“உங்க கனவை சொல்லுங்க” திட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய தலைமுறை கனவுகள் ஆரம்பம்! - அன்பில் மகேஷ் - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் அரசியல்-நிர்வாக வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கூட்டம் முடிந்த பின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து, அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

அப்போது அவர் பேசுகையில்,கொரோனா பெருந்தொற்றின் கடும் பாதிப்புகளிலிருந்து தமிழ்நாடு வெற்றிகரமாக மீண்டு, பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு இன்று “சூப்பர் ஸ்டார் மாநிலமாக” திகழ்கிறது என்றும் பெருமையுடன் தெரிவித்தார். நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், மக்கள் நலனை மையமாகக் கொண்டு பல்வேறு முக்கியத் திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் புதிய, தனித்துவமான மக்கள் தொடர்புத் திட்டம் ஒன்றை அறிவிப்பதற்காகவே செய்தியாளர்களை சந்தித்ததாக அமைச்சர் தெரிவித்தார். ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘காலை உணவுத் திட்டம்’, ‘தாயுமானவர் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பெருமிதம் தெரிவித்த அவர், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை முழுமையாக பயனுள்ள திட்டங்களுக்கே பயன்படுத்தி வருகிறோம் எனக் கூறினார்.

அதில் முக்கியமாக, ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார். ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு தனிநபரிடமும் உள்ள கனவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இந்தத் திட்டத்திற்காக 50,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று, “உங்களுக்கு பயனுள்ளதாக இருந்த அரசுத் திட்டம் எது?”, “உங்கள் கனவு என்ன?” போன்ற கேள்விகளை எழுப்பி மக்களின் கருத்துகளை சேகரிப்பார்கள். இளைஞர்கள் மட்டுமின்றி, அயலகத் தமிழர்களிடமும் அவர்களின் கனவுகள் குறித்து கேட்டறியப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சேகரிக்கப்படும் தகவல்கள் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ‘கனவு அட்டை’ என்ற புதிய அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் வகுக்கப்படும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் செய்ய வேண்டிய பணிகளுக்கான அடித்தளமாக இந்த முயற்சி அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற இந்த முக்கியமான திட்டத்தை வருகிற 9-ந் தேதி பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அன்பில் மகேஷ் அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tell us your dream scheme new generation dreams begins under leadership Mk Stalin Anbil Mahesh


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->