எம்எல்ஏ-ஆக இனி 21 வயது போதும்... சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் முதல்வர்! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் குறைந்தபட்ச வயது வரம்பை 25-இல் இருந்து 21 ஆகக் குறைக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தெலங்கானா சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1990 அக்டோபர் 19 அன்று தொடங்கிய மத நல்லிணக்க யாத்திரையை நினைவுகூறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களுக்கு “ராஜீவ் காந்தி நல்லிணக்க விருது” வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ரேவந்த் ரெட்டி, “வாக்களிக்க குறைந்தபட்ச வயதை 21-இல் இருந்து 18 ஆகக் குறைத்து, இளைஞர்களை அரசியல் பங்கேற்புக்கு அழைத்தவர் ராஜீவ் காந்தி. அதேபோல, 21 வயதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியாற்றும் இளைஞர்கள், ஏன் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடியாது? அவர்களுக்கும் நாட்டை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்,” என்றார்.

அவர் மேலும், “நாட்டின் ஜனநாயக அமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியமானது. அவர்களுக்கு முடிவு எடுக்கும் தகுதி உள்ளது. எனவே, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 25-இல் இருந்து 21 ஆகக் குறைப்பதற்கான அரசமைப்புச் சட்ட திருத்தம் மத்திய அரசால் உடனடியாக செய்யப்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்பதால், அவர்களுக்கு அரசியல் தலைமையின் வாய்ப்புகள் விரிவாக வழங்கப்பட வேண்டும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

telangana ML Age Congress


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->