தாராபுரம் இடைத்தேர்தல்...! தவெக வேட்பாளர் சத்தியபாமா இன்று வேட்புமனு தாக்கல்...! - சூடுபிடிக்கும் தேர்தல் களம் - Seithipunal
Seithipunal


தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் என பல்வேறு தரப்பினர் களமிறங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 12, 13, 14-ந்தேதிகளில் விடுமுறை காரணமாக மனு தாக்கல் நடைபெறாத நிலையில், நேற்று மீண்டும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதன்மூலம் அந்த தொகுதியில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனும் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும் தனது மனுவை அளித்தார்.இதனிடையே, பனைமரம் ஏறும் தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் தனது தொழிலை பிரதிபலிக்கும் வகையில் பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் வந்து சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தது அங்கு திரண்டிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

தாராபுரம் தொகுதியிலும் நேற்று வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரே நாளில் 15 பேர் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.இதில் தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த வக்கீல் சுகன்யா தி.மு.க. வேட்பாளராக நேற்று 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்.

முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அவர், முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று தாராபுரம் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜாவிடம் மனுவை அளித்தார்.மேலும், சுகன்யாவின் கணவர் மணிவாசகமும் தனியாக ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா இன்று தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்டோரும் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

அதேபோல் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

இதைத்தொடர்ந்து, இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tarapuram by election Tvk candidate Sathiyabhama files nomination today election field heating up


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->