கூட்டணியில் முஸ்லிம் லீக்... இதான் மதச்சார்பின்மையா? தவெக கூட்டணியைச் சாடிய தமிழிசை சவுந்தரராஜன்!
Tamilisai Soundararajan Slams TVK Led Alliance as Confused Coalition Questions Secular Credentials
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரவிருக்கும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தோழமைக் கட்சிகளுடன் இணைந்து 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்ற புதிய கூட்டணிக் கட்டமைப்பை முறைப்படி அறிவித்துள்ளது.
இக்கூட்டணியின் பெயரையும் கொள்கையையும் மையமாகக் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தவெகவின் இந்த புதிய அரசியல் நகர்வு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், "மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரில் மட்டுமே மதச்சார்பின்மை உலா வருகிறது; ஆனால் அதன் செயல்பாடுகள் முழுக்க முழுக்கக் குழப்பம் நிறைந்ததாகவே இருக்கின்றன" என்று சாடியுள்ளார்.
மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) போன்ற குறிப்பிட்ட மத அடையாளங்களைக் கொண்ட கட்சிகளைக் கூட்டணியில் அங்கம் வகிக்க வைத்துக்கொண்டு, இக்கூட்டணியை எவ்வாறு 'மதச்சார்பற்ற கூட்டணி' என்று அழைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதச்சார்பின்மை என்பது வெறும் பெயரளவில் சூட்டிக்கொள்ளும் அடையாள அரசியல் அல்ல என்றும், நாட்டின் அனைத்து மதங்களையும் சமமாகவும் நடுநிலையாகவும் அணுகும் கோட்பாடாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "கொள்கையில் தெளிவின்மை, கூட்டணியை வழிநடத்துவதில் குழப்பம், பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் முரண்பாடு, மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் தோல்வி என ஒட்டுமொத்தமாக இது ஒரு ‘குழப்பமான கூட்டணி’யாகவே காட்சியளிக்கிறது" என்று அவர் தனது பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இறுதியாக, தவெக தலைமையிலான இக்கூட்டணியை 'மனிதபிமானமற்ற, சமூகநீதியற்ற, கொள்கையற்ற குழப்பக் கூட்டணி' என்றுதான் தமிழ்நாட்டு மக்கள் பார்ப்பார்கள் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தவெக கூட்டணி குறித்து பாஜக தலைமை முன்வைத்துள்ள இந்த நேரடி விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
English Summary
Tamilisai Soundararajan Slams TVK Led Alliance as Confused Coalition Questions Secular Credentials