தமிழ்நாடு ரத்தத்தில் தோய்ந்து கிடக்கிறது..! - குற்றச் சம்பவங்களை அடுக்கிக் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்...!
Tamil Nadu soaked blood MK Stalin who stirred up storm by listing criminal incidents
“குற்றவாளிகள் அச்சமின்றி நடமாடும் நிலையும், பொதுமக்கள் அச்சத்துடனே வாழும் சூழலும் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறிய கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதை இந்த சம்பவங்கள் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருத்தணியில் தனது 17 வயது மகளுக்கு தொல்லை கொடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த தந்தை, தனது வீட்டின் முன்பாகவே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் என்ற மூதாட்டி பட்டப்பகலில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது நகைகளையும் கொலையாளிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்டுவிட்டு திரும்பிய வீரபத்திரன் என்பவர், தனது மனைவியின் கண் முன்னேயே மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மதுபோதையில் ஒருவரை நிர்வாணப்படுத்தி கொலை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.சோழவந்தானில் மதுக்கடை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த சியாம் சுந்தர்ராஜன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
எண்ணூர் ரெயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.வடக்கு, தெற்கு, மேற்கு என மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், தலைநகர் சென்னையிலும் குற்றச்சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்டப்பகல், நள்ளிரவு என்ற வேறுபாடின்றி கொலை, தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதால், தமிழ்நாடு ரத்தத்தில் தோய்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.வீட்டுக்குள்ளும் பாதுகாப்பில்லை, வெளியே சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காவலர்களின் ரோந்துப்பணி முறையாக நடைபெறுகிறதா என்ற கேள்வியை மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டிய சிங்கப்பெண் அதிரடிப்படையினர், தங்களது காணொலி பதிவுகளை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை பெண்களின் பாதுகாப்பிலும் காட்டுவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல், இறுதியில் புகார் அளித்தவர்களே கொலை செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குற்றவாளிகள் முறையாக கண்காணிக்கப்படுகிறார்களா என்ற கேள்விக்கும் அவர் பதில் கேட்டுள்ளார். குற்றவாளிகள் மீதான கண்காணிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவமே எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மிகவும் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டிய முதல்-அமைச்சர், தனது பதவியை காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.அதற்கான விலையாக அப்பாவி மக்களின் உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர், மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையின் தீவிரத்தை உடனடியாக உணர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.சாக்குப்போக்குகளை கூறி பொறுப்பில் இருந்து விலகிச் செல்லும் நிலை இனியும் நீடிக்கக்கூடாது என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இனிமேலும் வெறும் அறிவிப்புகளுடன் நின்றுவிடாமல், குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அச்சத்தை போக்கவும் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Tamil Nadu soaked blood MK Stalin who stirred up storm by listing criminal incidents