கரூர், கோவை மருத்துவமனைகளில் இந்தி அச்சு கவர் அதிரடி நிறுத்தம்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி நடவடிக்கை...!
Hindi print covers banned in Karur and Coimbatore hospitals Minister Arunraj takes action
கரூர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகளில் இந்தி இடம்பெற்றிருப்பதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே இந்த மாத்திரை உறைகள் பயன்பாட்டுக்கு வந்ததாக குற்றம்சாட்டிய அவர், தற்போது அதனை வைத்து அரசியல் செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"மொழியை முன்வைத்து தி.மு.க.வினர் அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர், கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மாத்திரை உறைகளை தற்போது கையில் எடுத்துக்கொண்டு, தாங்கள் ஆட்சியில் செய்த தவறுகளை மறைத்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தின் உண்மை நிலையை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகள் வழக்கமாக மத்திய சிறையில் இருந்து பெறப்பட்டு வந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த உறைகளில் காலை, மதியம், இரவு போன்ற விவரங்கள் தமிழ் மொழியில் மட்டுமே முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய சிறையில் இருந்து வழங்கப்படும் மாத்திரை உறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இதையடுத்து ஈரோடு மாவட்ட அச்சகத் தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் உறைகளை அச்சிடுவதற்கு, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலமான டிசம்பர் 31-ந்தேதி அவசரமாக ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி அச்சிடப்பட்ட உறைகள் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே, அதாவது தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல் கோவை அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மாத்திரை உறைகளும் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பே தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அலுவலக நடைமுறைகள் மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அந்த உறைகள் அச்சிடப்பட்டு, பின்னர் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தங்கள் ஆட்சிக் காலத்திலேயே இந்தி இடம்பெற்ற மாத்திரை உறைகளை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டு, தற்போது ஆளும் கட்சி மீது பழி சுமத்துவது எந்த வகையான அரசியல் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்த உறைகள் பயன்பாட்டில் இருந்தபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த தி.மு.க.வினர், தற்போது திடீரென மொழிப் பாதுகாவலர்களைப் போல் குரல் எழுப்புவது ஏன் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.தாங்களே அனுமதித்த நடைமுறையை தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக சித்தரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போதைய அரசு நிர்வாகம், கிடங்கில் இருந்த தேவைக்கேற்ப மாத்திரை உறைகளை மட்டுமே கொள்முதல் செய்ததாகவும், தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டிருந்த வடிவமைப்பு அல்லது மொழியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு வந்தவுடன் கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் சர்ச்சைக்குரிய மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கரூரில் மீண்டும் பழைய நடைமுறையை பின்பற்றி, மத்திய சிறையில் இருந்து மாத்திரை உறைகள் பெறப்பட்டு, அவற்றில் தமிழ் மொழியில் மட்டுமே தேவையான விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.கோவையில் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே இடம்பெறும் புதிய மாத்திரை உறைகள் உடனடியாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை பெயரளவில் கடைப்பிடிக்காமல், கொள்கை உறுதியுடன் பின்பற்றி வரும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம் என்றும், இந்த நிலைப்பாட்டில் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்யப்போவதில்லை என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சியாக செயல்படும் தி.மு.க. இனியாவது குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைப்பதை தவிர்த்து, ஆக்கபூர்வமான முறையில் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Hindi print covers banned in Karur and Coimbatore hospitals Minister Arunraj takes action