தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? “தமிழக எழுச்சிக் கழகம்” பெயரில் பதிவு என தகவல் – நடிகர் தரப்பு பரபரப்பு மறுப்பு!
Is Dhanush launching a political party Reports suggest registration under the name Tamilaga Ezhuchi Kazhagam Actor camp issues a strong denial
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த மேலும் சில முன்னணி நடிகர்களும் அரசியல் களத்தில் இறங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் நடிகர் தனுஷ் தனது அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாக தற்போது தகவல் ஒன்று பரவி வருகிறது.
‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் தனுஷ் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், சமீபகாலமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து வருகிறார். இந்த சந்திப்புகள் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும், தனுஷ் தனது அரசியல் பயணத்திற்கான அடித்தளத்தை அமைத்து வருவதாகவும் ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பும், அவர் வெளியிட்டு வரும் சில கருத்துகளும் அவரது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்பட்டன. இதனால், தற்போது அவரது கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் கூடுதல் கவனம் பெற்றது.
ஆனால், இந்த தகவலை தனுஷ் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து தனுஷின் தரப்பிடம் கேட்கப்பட்டபோது, “தனுஷ் கட்சி தொடங்குவது உறுதிதான். ஆனால் கட்சியின் பெயரை இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் தனுஷ் கட்சி பதிவு செய்துவிட்டதாக வெளியான தகவல் தற்போது மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து திட்டமிட்டு வருவதாக அவரது தரப்பு தெரிவித்திருப்பது, அவரது அரசியல் பயணம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். பின்னர் கொரோனா காலகட்டம் உள்ளிட்ட காரணங்களால் அந்த அரசியல் திட்டத்தை அவர் கைவிட்டார். இந்த நிலையில், ரஜினிகாந்தின் ஆதரவுடன் தனுஷ் அரசியலுக்கு வர திட்டமிட்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கும் இதுவரை உறுதியான ஆதாரம் அல்லது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மேலும், தனுஷ் உள்ளாட்சி தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக 2031-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து அரசியல் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், தனுஷின் தேர்தல் திட்டம் குறித்து அவரது தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, விஜய்யின் அரசியல் வருகையும் தனுஷின் அரசியல் ஆர்வம் குறித்த விவாதங்களில் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், திரையுலகில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் களமிறங்கினார். கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றியிருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது அரசியல் பயணம் திரையுலகில் உள்ள மற்ற நடிகர்களிடையேயும் அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக நடிகர் சிவகார்த்திகேயனும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். நடிகர் சூர்யாவும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இவ்வாறு முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் சினிமா வரலாற்றிலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை கைப்பற்றிய பின்னர், சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் அரசியல் கட்சிகளை தொடங்கி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். ஆனால், அவர்களின் அரசியல் பயணம் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றியைப் போன்றதாக அமையவில்லை.
இந்த நிலையில், தனுஷ் உண்மையில் எப்போது கட்சி தொடங்கப் போகிறார், கட்சியின் பெயர் என்ன, அவரது அரசியல் பயணம் எந்தத் தேர்தலில் தொடங்கும் என்பது குறித்து தற்போது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவலை தனுஷ் தரப்பு மறுத்துள்ள நிலையில், அவரது அரசியல் கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இதுதொடர்பான தகவல்கள் அனைத்தும் எதிர்பார்ப்பாகவே பார்க்கப்படுகின்றன.
English Summary
Is Dhanush launching a political party Reports suggest registration under the name Tamilaga Ezhuchi Kazhagam Actor camp issues a strong denial