தேர்தல்களை ரத்து செய்...! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகச் சீமான் கொந்தளிப்பு...! - Seithipunal
Seithipunal


வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது தலைமையில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்து மீண்டும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"சனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டிய தேர்தல் அமைப்பின் செயல்பாடுகள் மீது தொடர்ந்து சந்தேகங்கள் எழுவது கவலைக்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி தொடக்கம் முதலே எதிர்த்து வந்ததாகவும், அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகுதியுடைய வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதும் நீக்குவதும் உரிய சட்ட நடைமுறைகளின்படியே நடைபெறுகிறதா, தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா என்பன போன்ற கேள்விகளை அப்போதே நாம் தமிழர் கட்சி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.தற்போது வெளியாகியுள்ள தகவல்கள், அந்த சந்தேகங்கள் அனைத்தும் அடிப்படையற்றவை அல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பான முடிவுகளில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுவது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.சில முக்கியமான நடவடிக்கைகள் அவர்களின் கவனத்துக்கே கொண்டு வரப்படாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், வாக்காளர் தரவுகளை கையாளும் விதம் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

140 கோடி மக்களின் ஜனநாயக உரிமையை பாதிக்கும் அளவிலான அதிகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு வழங்கியது யார் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் எந்த அடிப்படையில் நீக்கப்பட்டன, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கப்பட்டதா, தங்கள் தரப்பை விளக்குவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டதா, அவர்கள் அளித்த முறையீடுகள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டன என்பதற்கு தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்ட கோப்புகள், அவற்றுக்கு வழங்கப்பட்ட பதில்கள் மற்றும் ஒப்புதல் பெறப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றாலும், அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டவை என தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் ஒரு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால், அந்த முடிவின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய முடிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல்களின் செல்லுபடித்தன்மையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இது ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய பிரச்சினை அல்ல என்றும், மக்கள் தங்கள் வாக்கின் மூலம் வழங்கும் தீர்ப்பை தேர்தல் நடைமுறை நேர்மையாக பிரதிபலிக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை எதிர்கால தலைமுறையினரிடமும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் எழும் கேள்விகளுக்கு மவுனம் பதிலாக இருக்க முடியாது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்ட விதம், தரவுகள் கையாளப்பட்ட நடைமுறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் செயல்முறை ஆகியவை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் ரத்து செய்து, முழுமையாக சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.தகுதியுடைய ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதி செய்யப்பட்ட பின்னர், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cancel elections Seeman agitation against Chief Election Commissioner Gnanesh Kumar


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->