மேகதாது அணை விவகாரம்; ஆகஸ்ட் 03-இல் தமிழக முதல்வர் விஜய் - கர்நாடக முதல்வர் நேரடி சந்திப்பு..!
Tamil Nadu CM Vijay will visit Karnataka on August 3rd for talks on the Mekedatu Dam issue
தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 03-ஆம் தேதி கர்நாடகா செல்கிறார். அங்கு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசவுள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகின்ற நிலையில், இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் நேற்று நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:
தமிழகத்தின் நீராதாரம் மற்றும் காவிரி நதிநீர் உரிமைகள் தொடர்பான விவகாரத்தில் அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது என்றும், மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அது தமிழகத்தின் மறுக்க முடியாத உரிமை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மாநில எல்லை பிரச்சினைகள் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கவும், ஆலோசனைகளை மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 03-ஆம் தேதி கர்நாடகா செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அங்கு முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அவர் நேரடியாக பங்கேற்று, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முக்கியமாக இக்கூட்டம், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விநியோகம் மற்றும் விவசாயிகள் சந்தித்து வரும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதன்போது காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு சேர வேண்டிய உரிய பங்கை உடனடியாகத் திறக்க வேண்டும் என கர்நாடக அரசிடம் இக்கூட்டத்தின் போது வலியுறுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் கர்நாடகா செல்லும் போது காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தப்படும் என்றும் அமைச்சர் வினோத் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் கடைமடை பகுதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீர், கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணையை கட்டினால் தடுக்கப்படும்.
இதனால் தமிழகத்திற்கு பெரும் பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. ஆகவே, எந்த சூழலிலும் மேகதாது அணை கட்டுமானத்தை அனுமதிக்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாகவுள்ளது. அந்தவகையில் வரும் ஆகஸ்ட் 03-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு வழக்கமாக பெறப்பட வேண்டிய காவிரி நீரின் அளவை தங்குதடையின்றி வழங்கிட கர்நாடக அரசிற்கு முதல்வர் தரப்பில் பலமான அழுத்தம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tamil Nadu CM Vijay will visit Karnataka on August 3rd for talks on the Mekedatu Dam issue