சிறப்பு ரயில் விவகாரத்தில் பரபரப்பு...! மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை போராட்டம்...!
special train issue Communist Party India protest tomorrow against central government
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"மத்திய பா.ஜ.க. அரசு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிரான கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மக்களின் நலன்களையும் மத்திய அரசு புறக்கணிப்பதாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு சட்டப்பூர்வமாக வேலை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதன் மூலம் கிராமப்புற தொழிலாளர்களின் வேலை பெறும் உரிமை பாதிக்கப்படுவதுடன், மாநில அரசுகளுக்கும் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி மற்றும் பன்முகத்தன்மை ஆகிய அடிப்படை கொள்கைகளை பாதுகாக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி ‘மாற்றத்திற்கான பேரணி’ நடத்தப்பட உள்ளது.டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டெல்லி செல்வோருக்காக தனி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், விதிமுறைகளின்படி முன்பணம் பெற்றதுடன், தனி சிறப்பு ரயில் ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட ஒப்புதலையும் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கடந்த 19-ம் தேதி திடீரென முன்பணம் திருப்பி அளிக்கப்பட்டதுடன், சிறப்பு ரயிலுக்கான அனுமதி வழங்கப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் பங்கேற்கும் தங்களது பேரணிக்கு சிறப்பு ரயில் வழங்க மறுப்பது பாரபட்சமான அணுகுமுறை என்றும் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் நாளை, ஆகஸ்ட் 21-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் திரளாக பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தனி ரயில் இயக்குவது தொடர்பான முடிவை ரயில்வே நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், திருச்சி ரயில்வே கோட்டத்தில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
special train issue Communist Party India protest tomorrow against central government