டெல்லி துணை ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி; நடந்தது என்ன..?
Rahul Gandhi staged a protest in front of the Delhi Deputy Commissioners office
தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் 20-ஆம் தேதி சிஜேபியினர் நடத்திய பேரணியின் போது போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியதாக கூறி, முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்ய வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லி துணை ஆணையர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டார்.
பெல்லட் குண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சாஹில் லோச்சாப் என்பவரை அழைத்துக் கொண்டு நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகம் சென்ற ராகுல் காந்தி, காவல்துறை தாக்குதலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தினார்.
அங்கு அவரது கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து, அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், டெல்லி துணை ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் அங்கு வந்தார். ராகுலுடன் இணைந்து அவரும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''சாஹில் லோச்சாப் எதிர்கொண்ட காவல்துறை அத்துமீறல் குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதற்காக இன்று நாடாளுமன்ற வீதியில் உள்ள துணை ஆணையர் (DCP) அலுவலகத்திற்கு நான் சென்றிருந்தேன்.
ஜூலை 20 அன்று, ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சாஹில் மீது காவல்துறையினர் பெல்லட் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். பெல்லட் குண்டுகளால் பலத்த காயமடைந்த சாஹிலின் ஒரு கண் பார்வை தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.
அமைதியாக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் சட்டவிரோதமானது மட்டுமல்ல, அது ஒரு கடுமையான குற்றமும் கூட. இந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மாணவர்களிடம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல பிரதமர் நரேந்திர மோடியும் மாணவர்களிடம் மன்னிப்பு கோரவில்லை.

இப்போது, நீதிக்காக சாஹில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய முற்படும்போது, அதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதன் மூலம், அரசியலமைப்பும் அரசியலமைப்பு உரிமைகளும் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. அமித் ஷா அவர்களே, நீதி வழங்க நீங்கள் ஏன் இவ்வளவு அஞ்சுகிறீர்கள்? இந்த அச்சம், உங்கள் குற்றத்தை நீங்கள் ஒப்புக்கொள்வதையே காட்டுகிறது.
முதல் தகவல் அறிக்கை நிச்சயம் பதிவு செய்யப்படும். நீதித்துறை விசாரணை நடைபெறும். இந்த அத்துமீறலில் குற்றவாளிகளாக உள்ள உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சாஹிலுக்கும், அவரைப் போன்ற பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.''என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Rahul Gandhi staged a protest in front of the Delhi Deputy Commissioners office