"தமிழகத்திற்கு எதிராக சில கட்சிகள் செயல்படுகின்றன; அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை" – அமைச்சர் நிர்மல்குமார்
Some parties are acting against Tamil Nadu an all party meeting is not necessary Minister Nirmal Kumar
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கு பதிலாக சில அரசியல் கட்சிகள் தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக கூறினார்."கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்ற ஒரே கருத்தில் உள்ளன. ஆனால் தமிழகத்தில் சில கட்சிகள், ஏதாவது ஒரு வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கக் கூடாது என்பதுபோல் செயல்படுகின்றன" என்று அவர் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதற்கு பின்னர் சில கட்சிகள் அதற்கு எதிராக பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்."சட்டமன்றத்தில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இணைந்து தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆனால் இரண்டு நாட்களிலேயே அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர். பின்னர் நீதிமன்றத்தையும் அணுகுகின்றனர்" என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குறித்து பேசிய நிர்மல்குமார், சட்டப்பேரவையில் தீர்மானம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், "முதல்வர் விஜய் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடாது என்பதுதான் சிலரின் நோக்கமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் பாஜகவுடன் இணைந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுகின்றன. அப்படிப்பட்ட சூழலில் அவர்களுடன் எப்படி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், மாநிலத்தின் நீருரிமையை பாதுகாக்க தேவையான அனைத்து வழிகளையும் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், கர்நாடகாவில் அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் செயல்படுவதுபோல தமிழகத்திலும் மாநில நலனே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
English Summary
Some parties are acting against Tamil Nadu an all party meeting is not necessary Minister Nirmal Kumar