தனிப்பாதை...புதிய வியூகம்...! 'அடுத்த பொதுத்தேர்தலில் நேரடி மோதல்'...! - அண்ணாமலையின் திடீர் அறிவிப்பால் ஆடிப்போன அரசியல் கட்சிகள்....!
separate path new strategy Direct clash next general election Political parties shaken by Annamalai sudden announcement
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியதை தேசிய தலைமையே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதன்மூலம் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தனது விலகல் குறித்து வெளியிட்ட காணொளி பதிவில், "புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம்" என்ற முழக்கத்துடன் புதிய பயணத்தை தொடங்குவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் மொழி மற்றும் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் தேவைப்படுவதாக குறிப்பிட்ட அவர், இளைஞர்களை மையப்படுத்திய, சமரசமற்ற கொள்கைகள் கொண்ட இயக்கத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், "மாறுவோம்... மாற்றுவோம்" என்ற கொள்கை வாசகத்துடன் செயல்படும் இந்த இயக்கத்தில் நிரந்தர தலைவர், நிரந்தர பதவிகள் என்ற நடைமுறை இருக்காது என்றும் கூறியுள்ளார்.
அரசியலுக்கு புதிய தலைமுறையினரை உருவாக்கும் நோக்கில் "அப்துல்கலாம் சென்டர் பார் எத்திக்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ்" என்ற அரசியல் பயிற்சி மையமும் தொடங்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில், எதிர்வரும் தேர்தலில் தனது அரசியல் அமைப்பு போட்டியிடும் என்றும், சரியான நேரத்தில் இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து "இது நம்ம இயக்கம்" என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், குறுகிய காலத்திலேயே ஆயிரக்கணக்கானோர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசியலில் ஏற்கனவே புதிய தலைமுறை அரசியலுக்கான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் முயற்சி மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
English Summary
separate path new strategy Direct clash next general election Political parties shaken by Annamalai sudden announcement