61 வயதில் கௌரி ஸ்ப்ராட்டை திருமணம் செய்யும் அமீர் கான்? ஜூலை 5-ஆம் தேதி பதிவுத் திருமணம் என தகவல்!
Aamir Khan to marry Gauri Spratt at 61 Reportedly the marriage will be registered on July 5th
பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது தோழி கௌரி ஸ்ப்ராட்டை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 61 வயதான அமீர் கான் மற்றும் 47 வயதான கௌரி ஸ்ப்ராட் ஆகியோர் வரும் ஜூலை 5-ஆம் தேதி மும்பையில் எளிய முறையில் பதிவுத் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமீர் கானுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, இருவரும் சமீபத்தில் தங்களது உறவை திருமண பந்தமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் சம்மதத்துடன் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
கௌரி ஸ்ப்ராட், அமீர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவராக பணியாற்றியுள்ளார். அவருக்கு முந்தைய திருமணத்தில் பிறந்த ஒரு மகன் உள்ளார். மேலும், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட ஆதரவாளரான பிலிப் ஸ்ப்ராட்டின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமீர் கானுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. முதல் மனைவி ரீனா தத்தாவுடன் ஜுனைத் மற்றும் இரா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். பின்னர் இயக்குநர் கிரண் ராவை திருமணம் செய்த அவர், 2021-ஆம் ஆண்டு அவரிடமிருந்து பிரிவை அறிவித்தார். கிரண் ராவுடன் ஆசாத் என்ற மகனும் உள்ளார்.
கடந்த ஆண்டு தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கௌரி ஸ்ப்ராட்டை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்திய அமீர் கான், தாங்கள் காதலித்து வருவதை உறுதிப்படுத்தியிருந்தார். அப்போது திருமணம் குறித்து கேட்கப்பட்டபோது, “60 வயதில் திருமணம் எனக்கு பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை” என நகைச்சுவையாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து அமீர் கான் அல்லது அவரது தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
English Summary
Aamir Khan to marry Gauri Spratt at 61 Reportedly the marriage will be registered on July 5th