இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறாரா?
Will Sivarajkumar act in the Kamal Rajini film directed by Nelson
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார், தற்போது தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். கன்னடம் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், பல்வேறு மொழிகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
சமீபத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் ‘நரசிம்மா’ கதாபாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்த்த சிவராஜ் குமார், தற்போது பல புதிய படங்களில் பிஸியாக உள்ளார். தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், தமிழிலும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படும் புதிய திரைப்படம் தொடர்பான தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் படத்தில் சிவராஜ் குமாரும் இடம்பெறுவாரா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய சிவராஜ் குமார், “பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து நடிப்பதை திரையில் பார்ப்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும். நானும் அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால், அந்தக் கதையில் எனது கதாபாத்திரத்திற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சிவராஜ் குமார் பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கில் ராம் சரணுடன் இணைந்து நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கன்னடத்தில் பல புதிய திட்டங்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் - கமல் ஹாசன் கூட்டணிப் படத்தில் சிவராஜ் குமார் இணைவாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், மூன்று முன்னணி நட்சத்திரங்களும் ஒரே திரைப்படத்தில் இணைந்தால் அது இந்திய சினிமாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
English Summary
Will Sivarajkumar act in the Kamal Rajini film directed by Nelson