ஜேசன் சஞ்சயின் எளிமை ஆச்சரியப்படுத்தியது! அப்படியே விஜய் மாதிரிதான்!‘சிக்மா’ ஹீரோ சந்தீப் கிஷன் ஓபன் டாக்!
Jason Sanjay simplicity was surprising Just like Vijay Sigma hero Sandeep Kishan opens up
நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், தமன் இசையமைத்துள்ளார். திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகுவார் என பலர் எதிர்பார்த்த நிலையில், அவர் இயக்குநர் பாதையைத் தேர்வு செய்துள்ளார். வெளிநாட்டில் இயக்கம் மற்றும் படத்தொகுப்பு தொடர்பான படிப்பை முடித்த அவர், தற்போது தனது முதல் முழுநீள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், ஜேசன் சஞ்சயுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “ஜேசன் சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கும் இளைஞர். அவரும் அவரது குழுவினரும் இந்தப் படத்திற்காக நீண்ட காலமாக உழைத்துள்ளனர். முன்தயாரிப்பு பணிகள் முதல் எடிட்டிங் வரை ஒவ்வொரு விஷயத்திலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் பொறுமை. வெறும் 25 வயதிலேயே ஒரு இயக்குநராக அவர் வெளிப்படுத்திய அமைதி, பொறுமை மற்றும் தனது இலக்கில் இருந்த தெளிவு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
இயக்கம் மற்றும் படத்தொகுப்பு குறித்து முறையாக பயின்றிருப்பதால், தொழில்நுட்ப விஷயங்களிலும் நல்ல புரிதலுடன் செயல்பட்டார். இவ்வளவு இளம் வயதுடைய இயக்குநருடன் பணியாற்றி நீண்ட நாட்களாகிவிட்டது.
அவர் தோற்றத்தில் தனது தந்தை விஜய்யை நினைவுபடுத்துகிறார். ஆனால் அதைவிட என்னை கவர்ந்தது அவரது எளிமையும் பணிவும் தான்” என்று பாராட்டினார்.
முதல் படத்திலேயே தனித்துவமான இயக்குநராக தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜேசன் சஞ்சய் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Jason Sanjay simplicity was surprising Just like Vijay Sigma hero Sandeep Kishan opens up