நோ கூட்டணி...! தவெக-வுடன் கைகோர்க்க மறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...! - மு. வீரபாண்டியன் அதிரடி பேட்டி...!
No alliance Communist Party India refuses join hands tvk M Veerapandian action packed interview
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட சமூக வலைதள பதிவு அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில், "தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி" சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதுடன், அந்த அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ள கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த கூட்டணி உருவாக்கம் தொடர்பாகவோ, மாநிலங்களவை வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை யாரும் அணுகவில்லை என்றும், கட்சித் தலைமையுடன் எந்தவித ஆலோசனையோ கருத்துப்பரிமாற்றமோ நடைபெறவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், "தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி" என்ற பெயரில் எந்த அரசியல் அணியும் தங்களது அறிவுக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டு உருவாக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியமைத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழங்கிய ஆதரவு முற்றிலும் வேறுபட்ட அரசியல் அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும் வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆட்சி உருவாகும் சூழலைத் தவிர்க்கவும், மத்திய அரசின் அரசியல் நகர்வுகளுக்கு தமிழ்நாட்டில் இடமளிக்கக் கூடாது என்ற நோக்கத்திலுமே அந்த ஆதரவு வழங்கப்பட்டதாக அவர் விளக்கியுள்ளார்.
எனவே, பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ள அரசியல் அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்பதை கட்சியின் மாநில செயற்குழு தெளிவாகவும் உறுதியாகவும் பதிவு செய்கிறது என்று வீரபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த விளக்கம் மாநிலங்களவை தேர்தலை ஒட்டிய கூட்டணி அரசியல் குறித்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
English Summary
No alliance Communist Party India refuses join hands tvk M Veerapandian action packed interview