பெட்ரோல், டீசலுக்கு குட்பை...? நாடு முழுவதும் ‘எத்தனால்’ எரிபொருள் நிலையங்கள்...! - மத்திய அரசின் மெகா பிளான்!
Goodbye petrol and diesel Ethanol fuel stations across country Central Government mega plan
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதி சார்பை குறைக்கும் நோக்கில் இந்தியா எத்தனால் பயன்பாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நாட்டின் முதல் ப்ளெக்ஸ்-ப்யூயல் தொழில்நுட்ப வாகனத்தை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள், அதிக அளவு எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பெட்ரோல் பயன்பாட்டை குறைத்து, உள்நாட்டு எரிசக்தி வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்ததாவது,"டெல்லி, மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக 50 முதல் 100 எத்தனால் எரிபொருள் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பின்னர் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 500 ஆகவும், 2027 ஆம் ஆண்டு முடிவிற்குள் 5,000 நிலையங்களாகவும் விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் தயாரிக்கப்படும் புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் குறைந்தபட்சம் பாதி வாகனங்கள் ப்ளெக்ஸ்-ப்யூயல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டால், கூடுதலாக 311.8 கோடி லிட்டர் எத்தனால் தேவை உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் விவசாயத் துறைக்கு புதிய வருவாய் வாய்ப்புகள் உருவாகி, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.12,403 கோடிக்கும் அதிகமான கூடுதல் வருமானம் கிடைக்கும் சூழல் உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை உயர்வால் கொள்முதல் செலவுகள் அதிகரித்திருந்தாலும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கையால் நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.550 கோடி வரை நிதிச் சுமை ஏற்படுவதாகவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தன்னிறைவை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், எத்தனால் அடிப்படையிலான எரிசக்தி மாற்றம் முக்கிய மைல்கல்லாக அமையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
English Summary
Goodbye petrol and diesel Ethanol fuel stations across country Central Government mega plan