'தவெக என்பது ரீல்ஸ் ஆட்சி; மக்களுக்கான ரியல் ஆட்சிக்கான பணிகளை தொடங்கவில்லை'; செந்தில் பாலாஜி விமர்சனம்..!
Senthil Balaji Criticizes TVK Government for Failing to Initiate Public Welfare Works
மாற்றம் என்று கூறி மக்களை ஏமாற்றி வெற்று கவர்ச்சியில் மக்களிடம் ஓட்டுகளை வாங்கியுள்ளார்கள். இன்னும் ரீல்ஸ் மோகத்தில் உள்ள தவெக அரசு ரியல் ஆட்சியாக இன்னும் மக்கள் பணியை தொடங்கவில்லை என திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. வி.செந்தில் பாலாஜி, ராமநாதபுரம் பகுதியில் (இன்று) புதன்கிழமை மாலை பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது:
தவெகவினர் தொடர்ந்து திமுகவை குறித்து விமர்சித்து வருகின்றனர் என்றும், திரையிலும், திரை உலகத்திலும், திரைப்படத்திலும் வசனங்கள் பேசலாம். ஆனால், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு என்ன அவசர தேவைகள் இருக்கிறதோ அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். அதுதான் முதல்வரின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தவெக அரசு திமுகவை விமர்சிப்பதை மட்டுமே குறியாக கொண்டிருக்கிறதாகவும், மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை எனவும், துறையின் அமைச்சர்களும், தங்களது துறையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்று செயல்படவில்லை. தவெக அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்றம் என்று கூறி மக்களை ஏமாற்றி வெற்று கவர்ச்சியில் மக்களிடம் ஓட்டுகளை வாங்கியுள்ளார்கள் என்று தவெகவினரை கடுமைக விமர்சித்துள்ளார்.
அத்துடன், மாற்றம் என்றால் என்னவென்று முதலில் அவர்கள் கூற வேண்டும் என்றும், மகளிர் பாதுகாப்பு படையை அமைப்பேன் என்று முதல்வர் கூறிய நிலையில் மூன்று முறை அதை தள்ளி போட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் நடவடிக்கை எடுப்பதற்கு ஆறு மாத காலம் பொறுத்திருக்க வேண்டுமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் விஷயத்தில் மோசமாக நிகழ்ச்சிகளில் பாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது டாஸ்மாக் விவகாரத்தில் எவற்றை கட்டுப்படுத்தி விட்டார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், தேர்தலுக்கு முன்பு வண்டி மீது ஏறி நின்று பொய்யான கருத்துக்களை கூறி அவதூறு பரப்பி பாட்டு எல்லாம் பாடினார்கள்? ஆனால் டாஸ்மாக் விவகாரத்தில் தற்போது வரை அந்த துறையின் அமைச்சர் விளக்கத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் அன்று பாடிய பாட்டுக்கு என்ன பதில்? என்று விமர்சித்துள்ளார்.
மேலும், தவெக என்பது ரீல்ஸ் ஆட்சி. இன்னும் அவர்கள் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளார்கள். அமைச்சர்களும், அரசும் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளது. மக்களுக்கான ரியல் ஆட்சியாக இன்னும் அவர்கள் பணிகளை தொடங்கவில்லை. அவர்கள் பணியை தொடங்குவார்கள் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் இல்லை என்று செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Senthil Balaji Criticizes TVK Government for Failing to Initiate Public Welfare Works