தொழிலாளர் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு; இந்தியா உட்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி; மீண்டும் வேலையை காட்டிய அமெரிக்கா...!
The US Imposes a 125 pc Additional Tariff on 54 Countries Including India
இந்தியா உள்ளிட்ட 54 நாடுகள் மீது 12.5 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் விதிகளை மீறி தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியதற்காக, இந்த கூடுதல் வரி விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல், ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் வருகிறார். குறிப்பாக வர்த்தக ரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்குக் கிடைக்கவில்லை என்றும் கூறி வந்தார்.
இதையடுத்து இந்தியா, கனடா, சீனா, மெக்சிகோ என அனைத்து நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கும் 10% முதல் 50% வரை வரிகள் விதிக்கப்பட்டன. மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதித்தார். அந்த வகையில் இந்தியாவுக்கும் 50% வரி விதிக்கப்பட்டு, பின்னர் வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு 18% ஆகக் குறைக்கப்பட்டது.

இதற்கிடையே, ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பாக சிறு வணிகர்கள் மற்றும் சில மாகாணங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், நாடுகளின் மீதான அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு செல்லாது எனும் உத்தரவை பிறப்பித்தது.
எனினும், மீண்டும் வரிவிதிப்பில் தீவிரம் காட்டும் ட்ரம்ப், மாற்றுச் சட்டங்களைப் பயன்படுத்தி 10 சதவீத உலகளாவிய வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனாலும், மீண்டும் உலக நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிவிதிப்பை சட்டவிரோதமானவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் விதிகளை மீறி தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியதற்காக, இந்தியா உள்ளிட்ட 54 நாடுகள் மீது 12.5 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் பரிந்துரைத்துள்ளார்.

இந்தியா, சீனா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட 54 நாடுகள், கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி மீதான தடைகளை அறிமுகப்படுத்தி, திறம்படச் செயல்படுத்தத் தவறிவிட்டதால், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
அதாவது, அமெரிக்கத் தொழிலாளர்களின் நலனைக் காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்தியா, இதுபோன்ற வர்த்தகப் பிரச்னைகளை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும் என அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த பொது விசாரணை ஜூலை -07ஆம் தேதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The US Imposes a 125 pc Additional Tariff on 54 Countries Including India