“அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷலானவர்”! பிரேம்ஜி குறித்து மனம் திறந்த சோனா!
Sona opens up about Premji
கவர்ச்சி நடிகையும் தயாரிப்பாளருமான சோனா, தனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ‘ஸ்மோக்’ வெப் தொடரின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் அவர், இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி அமரன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
பேட்டியில் பேசிய சோனா, “பிரேம்ஜி எனக்கு சகோதரர், நண்பர், பெஸ்டி, காதலர் என எந்த உறவாக வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதற்காக நாங்கள் காதலித்தோம் என்று அர்த்தமில்லை. அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷலானவர்,” என்று கூறினார்.
மேலும், “இன்றுவரை அவர் என்னை ‘புரொடூசர் மேடம்’ என்றே அழைப்பார். படப்பிடிப்புகளில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் என்னை அமைதிப்படுத்தும் நபராக அவர் இருந்திருக்கிறார். என் வாழ்க்கையின் மிகவும் சிக்கலான காலங்களில் என்னுடன் இருந்து ஆறுதல் கூறியவர் பிரேம்ஜி,” என்றார்.
பிரேம்ஜியின் குணத்தைப் பற்றி பேசும்போது, “ஒரு நண்பர்கள் குழுவில் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், ஒருவர் மட்டும் தெளிவாக இருந்து மற்றவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்புவார். அந்த மாதிரியான பொறுப்புள்ள நண்பர் தான் பிரேம்ஜி. என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றியவரும் அவர்தான்,” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், தங்களுக்குள் காதல் இருந்ததாகவும், அதனால்தான் பிரேம்ஜி நீண்ட காலம் திருமணம் செய்யாமல் இருந்ததாகவும் பரவிய வதந்திகளை சோனா மறுத்தார்.
“நாங்கள் காதலித்தோம் என்பது உண்மையல்ல. பிரேம்ஜி திருமணம் தாமதமானதற்கும் என்னுடனான நட்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவை அனைத்தும் சினிமா உலகில் வழக்கமாக பரவும் வதந்திகளே,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, கடந்த வாரம் இயக்குநர் விக்னேஷ் சிவன் குறித்தும் சோனா பேசியிருந்தார். தனது அலுவலகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய விக்னேஷ் சிவன், பின்னர் நயன்தாராவை சந்தித்து ‘நானும் ரவுடிதான்’ படத்தை தொடங்கிய பிறகு தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறியிருந்தார்.
“எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல நண்பர்களாகவும், சிறந்த அணியாகவும் இருந்தோம். ஆனால் திடீரென தொடர்பை நிறுத்திவிட்டது தான் வருத்தமாக இருந்தது. அவர் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சிதான், ஆனால் சொல்லாமல் விலகிச் சென்றது மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது,” என்று சோனா தெரிவித்திருந்தார்.
தற்போது சோனா பகிர்ந்துள்ள இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
English Summary
Sona opens up about Premji