திமுகவுடன் உறவு தொடரும்! விஜய் அதை செய்தால் மறுபரிசீலனை செய்வோம்! கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்!
The relationship with DMK will continue If Vijay does it we will reconsider Communists take drastic decision Shanmugam pales
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியை அமைத்துள்ள நிலையில், அந்த அரசுக்கு ஆதரவு அளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தனது அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. பிரச்சினைகளின் அடிப்படையில் திமுகவுடனான உறவு தொடரும் என்றும், அதிமுகவை அமைச்சரவையில் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
“மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் போன்ற விவகாரங்களில் திமுகவுடன் எங்களது அரசியல் உறவு தொடரும். இதை சிபிஐ மற்றும் சிபிஎம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன. அரசியல் சூழலே பல்வேறு முடிவுகளை தீர்மானிக்கும்.
தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளோம் என்றாலும், அதற்கான காரணங்களையும் வரம்புகளையும் திமுக தலைமையிடம் தெளிவாக தெரிவித்துள்ளோம். அதே நேரத்தில் யாரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை,” என்றார்.
திமுக மூத்த தலைவர் ஆ.ராசா, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறித்து தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் தொடர்பாகவும் சண்முகம் விமர்சித்தார்.
“பொறுப்பான பதவிகளில் இருந்தவர் இத்தகைய கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது ஏற்க முடியாதது. அதற்காக ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் மரியாதை மீறும் வகையில் பேசக் கூடாது. அதனால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கடுமையான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்,” என்றார்.
தவெக அரசுக்கு ஆதரவு வழங்கியபோது அதிமுகவை அமைச்சரவையில் சேர்க்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை சிபிஎம் தெரிவித்ததாகவும் சண்முகம் கூறினார்.
“அதிமுகவை அமைச்சரவையில் இணைத்தால் எங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என்று தவெக தலைமையிடம் தெரிவித்திருந்தோம். அதற்கு பதிலாக, அதிமுகவை அமைச்சரவையில் இணைக்கும் எண்ணமே இல்லை என்று முதலமைச்சர் விஜய் கூறியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எங்களிடம் விளக்கம் அளித்தார்,” என்று அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்திருக்கலாம் என சண்முகம் கருத்து தெரிவித்தார்.
“எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர். அந்த அடிப்படையில் விஜய் அவரை சந்தித்திருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது,” என்றார்.
திமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்படும் வாய்ப்பு குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த சண்முகம், மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்றார்.
“ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவும் அதிமுகவும் எதிரெதிர் அரசியல் செய்து வருகின்றன. திடீரென அவர்கள் இணைவது மக்களால் ஏற்கப்படாது. அந்த வகையான சந்தர்ப்பவாத அரசியலுக்கு எங்கள் ஆதரவு இல்லை,” என்று கூறினார்.
மேலும், தவெக ஆட்சி அமைக்காத சூழல் ஏற்பட்டிருந்தால் திமுக – அதிமுக இணைப்பு குறித்த விவாதங்கள் எழுந்திருக்கலாம் என்றும், ஆனால் மக்கள் தீர்ப்பை மதித்து தவெக ஆட்சியமைப்பதை திமுக தடுக்கவில்லை என்றும் சண்முகம் தெரிவித்தார்.
English Summary
The relationship with DMK will continue If Vijay does it we will reconsider Communists take drastic decision Shanmugam pales