அண்ணாமலை காங்கிரஸ் கட்சியை வலிமைப் படுத்துகிறார் - செல்வப்பெருந்தகை பேச்சு..!!
Selvaperunthagai Speaks About Annamalai
பாஜக தலைவர் அண்ணாமலை என்னை விமர்சிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியை வலிமைப் படுத்துகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லுகுறிக்கி கிராமத்தில் இன்று (ஜூலை 12) காலபைரவர் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவர் அண்ணாமலையின் சமீபத்திய பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, "பாஜகவினர் எப்போதும் தனி நபர்களை தாக்கிப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.. இவர்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் தான் இப்படி தனி நபர்களைத் தாக்கிப் பேசுவார்கள். இப்போது அந்த பழக்கத்தை தமிழகத்திற்கும் கொண்டு வந்துள்ளார்கள்.
பாஜகவினர் மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவது, தனி நபர்களை தாக்கிப் பேசுவதோடு அல்லாமல் ஆள் வைத்து தாக்கச் செய்கிறார்கள். குஜராத்தில் இருந்து தான் தமிழகத்திற்கு போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுகிறது. இதை மத்திய அரசு தான் தடுக்க வேண்டும். தமிழக அரசும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் குற்றச் செயல்களுடன் ஒப்பிடும்போது, இந்த 3 ஆண்டுகளில் பெருமளவு சம்பவங்கள் குறைந்துள்ளன. அண்ணாமலை என் மீது தொடர்ந்து தனி நபர் தாக்குதல் நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் அப்போது தான் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெறும். அவர் என்னை விமர்சிப்பதன் மூலம் அதை தான் செய்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Selvaperunthagai Speaks About Annamalai