'பள்ளி சிறுவன் உயிரிழந்துள்ளது பெருங்கொடுமை: தமிழ்நாடு அரசின் வர்க்கப் பாகுபாடுகளுடன் கூடிய பொறுப்பற்ற தனம்: சீமான் குற்றசாட்டு..!
Seeman alleges that class discrimination prevailing in government departments should be eliminated in connection with the death of a school boy in Thiruvotriyur
திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான் தெருவில் வசிக்கும் அல்தாப் அவர்களின் அன்புமகன் நவ்பில், தேங்கி கிடந்த மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

முன்னதாக, அதே பகுதியில் மழைநீர் வடிகால் சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன் மற்றும் சின்ன குருசாமி ஆகிய இரு தொழிலாளர்களும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய நிலையில், அதன் பிறகாகவது உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்வாரியம் எடுத்திருந்தால் அன்புமகன் நவ்பில் உயிர் பறிபோயிருக்காது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திருவொற்றியூர் கலைஞர் நகரில் சாலையில் தேங்கிருந்த மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி கமலி உயிரிழந்தார். அக்கொடுநிகழ்வு நடைபெற்று நான்கு ஆண்டுகளை கடந்தும்,திருவொற்றியூரில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சரிவர மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள தவறியதும், மழைநீர் சூழ்ந்திருந்த நிலையில், மின் கசிவுகளைச் சரிசெய்யாமல் மின் இணைப்பினைக் கொடுத்த மின்சார வாரியத்தின் அலட்சியமுமே திருவொற்றியூர் பகுதியில் தொடர்ச்சியாக மின்விபத்துகளும், அதன் காரணமான உயிரிழப்புகளும் ஏற்பட முதன்மைக்காரணமாகும்.

பெரும் வசதி படைத்தவர்கள் வாழும் நகரின் மையப்பகுதியில் வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்வதில் காட்டும் அக்கறையையும், வேகத்தையும், எளிய அடித்தட்டு மக்கள் வாழும் பின்தங்கியக் குடிசைப்பகுதிகளில் மேற்கொள்ளாத தமிழ்நாடு அரசின் வர்க்கப் பாகுபாடுகளுடன் கூடிய பொறுப்பற்றதனத்தால் ஏதுமறியா அப்பாவி பள்ளி சிறுவன் உயிரிழந்துள்ளது பெருங்கொடுமையாகும்.
ஆகவே, புறநகர்ப்பகுதிகளில் வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்களும் நம் மண்ணின் குடிமக்கள்தான் என்பதைக் கருத்திற்கொண்டு, அனைத்து மக்களின் உயிரும் சமமதிப்புடையது என்பதை இனியாவது தமிழ்நாடு அரசு உணர்ந்து, அரசுத்துறைகளில் நடைமுறையிலுள்ள வர்க்கப்பாகுபாடுகளைக் களைவதுடன், பின்தங்கியப் பகுதிகளிலும் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இத்தோடு, அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
பெற்றெடுத்து, பேணிவளர்த்த அன்புமகன் நவ்பிலை இழந்துவாடும் பெற்றோருக்கும், உறவுகளுக்கும் என் ஆறுதலைக்கூறி, துயரில் பங்கெடுக்கின்றேன்.'' என்று சீமான் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman alleges that class discrimination prevailing in government departments should be eliminated in connection with the death of a school boy in Thiruvotriyur