ஸ்கூல் படிப்புக்கு மட்டும்தான்... அரசியலுக்கு இல்லை...! - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு, அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு திரையிடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற செயல்களுக்கு கல்வி நிலையங்களில் எந்தவித அனுமதியும் இல்லை என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் அரசு நிகழ்ச்சியுடன் இணைந்து நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெண்கள் நடுநிலைப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாக வெளியாகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொடக்கக் கல்வித் துறை உடனடியாக விசாரணையை தொடங்கியது.

அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்டக் கல்வி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு சார்பில் நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்த அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு திரையிடக் கூடாது என்ற தெளிவான அறிவுறுத்தல் ஏற்கனவே அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த உத்தரவை மீறி, சம்பந்தப்பட்ட பள்ளியில் அரசியல் கட்சியின் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு ஒளிபரப்பியது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்த விவகாரம் குறித்து உடனடியாக விரிவான ஆய்வுக்கு உத்தரவிட்டதாகவும், நடைபெற்ற விசாரணையில் தலைமையாசிரியை தன்னிச்சையாக முடிவு எடுத்து, துறையின் வழிகாட்டுதல்களையும் நிர்வாக நடைமுறைகளையும் மீறி செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர்மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சமூக வலைதளங்களில் பரவி வரும் மற்றொரு காணொளி தொடர்பாகவும் தனித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.கல்வி நிலையங்கள் கல்வியை வளர்க்கும் புனித இடங்கள்; அவை அரசியல் நடவடிக்கைகளுக்கான களமாக மாறக் கூடாது என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி மாநிலத்தின் எந்த அரசுப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்விச் சூழலின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கூட்டுப்பொறுப்பு என்றும், அரசின் உத்தரவுகளை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள்மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School only studies not politics Minister Rajmohan stern warning


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->