பாகுபலி பாணியில் சத்யராஜ்...! 'திமுகவின் கட்டப்பா நான் தான்'...! - வைரலாகும் மாஸ் பேச்சு
Sathyaraj style Bahubali I am DMK Kattappa Mass speech goes viral
சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் கணினி, தையல், அழகுக் கலை உள்ளிட்ட தொழில்திறன் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் பயிற்சியை முடித்த 250 பேருக்கு முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சத்யராஜ் இணைந்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சத்யராஜ் உரையாற்றியபோது தெரிவித்ததாவது,"திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தேர்தல் அரசியலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல.

சமூக நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு உருவான மக்கள் இயக்கமாகும். மக்களுக்கான சேவையே அந்த இயக்கத்தின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. அதிகாரத்தில் இருப்பதா, எதிர்க்கட்சியில் இருப்பதா என்பது முக்கியமல்ல; சமூகத்தின் பின்தங்கிய மக்களை முன்னேற்றத்தின் உச்சிக்குக் கொண்டு செல்வதே அதன் உயர்ந்த இலட்சியமாகும்.ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் நலனே தி.மு.க.வின் முதன்மை நோக்கமாக இருந்து வருகிறது.
கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் உருவாகி வரும் புதிய பூங்காவை, எதிர்காலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று திறந்து வைப்பார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த அரசியல் இயக்கம் ஆட்சிக்கு வந்தாலும், தந்தை பெரியார் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிந்தனைகளை வழிகாட்டும் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தமிழகத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்திய தலைவர். கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்ததற்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் அந்த வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். திட்டங்களின் பெயர்களை மாற்றுவது அவர்களது விருப்பமாக இருக்கலாம்; ஆனால் மக்களின் வாழ்க்கையை மாற்றிய நலத்திட்டங்களை ஒருபோதும் மாற்றக் கூடாது.மக்கள் நலனே அரசின் உயர்ந்த கடமையாக இருக்க வேண்டும்.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தி.மு.க. வகுத்த வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றினால் அது மாநிலத்திற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். "இப்போது சுகாதாரத்துறை அமைச்சராக யார் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் மனதில் என்றும் என் அன்புத் தம்பி மா.சுப்பிரமணியன்தான் சுகாதாரத்துறை அமைச்சர்" என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இடையறாது உழைக்கும் இயக்கம். அது எதிர்க்கட்சியில் அமர்ந்தாலும் என் ஆதரவு எப்போதும் தொடரும். ஆட்சியில் இருக்கும்போது மட்டுமே அருகில் நிற்கும் மனிதன் நான் அல்ல. "தி.மு.க.வின் கட்டப்பா" என்று என்னை அழைத்தாலும் அதில் எனக்கு பெருமையே.
எங்களுக்கு திரைத்துறையில் கிடைக்கும் வெற்றிக்கும், தமிழ்நாட்டின் அமைதியும் வளமும் தான் அடிப்படை காரணம். எனவே இந்த மண்ணின் நலனை காக்கும் இயக்கத்திற்கு என் ஆதரவு என்றும் நிலைத்திருக்கும்.மேலும் பேசிய அவர், "நாம் வாங்கிக் கொடுத்த ஆட்டோவில் இன்று வேறொரு கட்சியின் கொடி பறக்கிறது என்று பலர் கூறுகிறார்கள்.
அந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதை காலமே பதிலளிக்கும். 'மாற்றம்' என்ற முழக்கத்தை நம்பி மக்கள் அவசரப்பட்டு வாக்களித்துவிட்டனர். குழந்தைகள், 'நண்பா', 'நண்பீஸ்' போன்ற கவர்ச்சியான முழக்கங்களை முன்வைத்து பெரியவர்களின் நம்பிக்கையைப் பெற்று வாக்குகளைப் பெற்றுவிட்டார்கள்" என்று தனது விமர்சனத்தை முன்வைத்தார்.இவ்வாறு நடிகர் சத்யராஜ் பேசினார்.
English Summary
Sathyaraj style Bahubali I am DMK Kattappa Mass speech goes viral