வைகை ஆறு குறித்து தமிழ்நாடு ஆளுநர் பேச்சு; ''சந்தேகம் ஏதும் இருந்தால் ஆர்.என். இரவியிடம் கேட்டுப்பாருங்கள்''; சு. வெங்கடேசன் எம்.பி பதிலடி..!
S Venkatesan MP responds to Tamil Nadu Governor's speech regarding Vaigai River
மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் இன்று INA-வின் "வேர்களைத் தேடி" கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியதாவது;
''நான் நிகழ்ச்சிக்கு வரும்போது, என் உதவியாளர் வைகை ஆற்றைக் காண்பித்தார். ஆறு இருக்கிறது. ஆனால், நீர் எங்கே என ஆச்சரியப்பட்டேன். ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும். எனவே இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நான் அவரிடம் சொன்னேன். மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் இதனை இலக்காக மாற்றி அதற்காக முயற்சி செய்ய வேண்டும். யாராவது இதற்கு முயற்சி எடுக்க வேண்டும். யாரும் முயற்சி எடுக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகை முயற்சி எடுக்கும்'' பேசினார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், ''ஆளுநர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு. சந்தேகம் ஏதும் இருந்தால் ஆர்.என். இரவியிடம் கேட்டுப்பாருங்கள்;'' என பதிலளித்துள்ளார்.
இது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பஹிவிட்டுள்ளதாவது;
''தமிழக ஆளுநர் வைகை ஆற்றைக் கடக்கும்போது, ஆற்றில் நீர் இல்லாததைக் கண்டு வேதனையுற்று, "உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும்'' என்று கூறியுள்ளார்.

ஆளுநர் அவர்களே, கடந்த வாரம் தமிழகச் சட்டமன்றத்தில் உரையாற்றச் சென்றபோது, கூவம் ஆற்றைக் கடந்துதானே சென்றீர்கள்? அங்கே ஆற்று நீர் தெள்ளத்தெளிவாகவா ஓடிக்கொண்டிருந்தது? அங்கு ஆளுநர் மாளிகை களத்தில் இறங்க வேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லையா?
ஆளுநர் மாளிகை நேரடியாகத் தலையிடும் என்று நீங்கள் கூறுவதன் நோக்கம் பிரச்சனையைத் தீர்ப்பதற்கல்ல, மாறாக ஓர் இணையாட்சி நிர்வாகத்தை உருவாக்கவே. ஆளுநர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு. சந்தேகம் ஏதும் இருந்தால் ஆர்.என். இரவியிடம் கேட்டுப்பாருங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
S Venkatesan MP responds to Tamil Nadu Governor's speech regarding Vaigai River