முதல்வர் கரூர் செல்லும் முன் செந்தில் பாலாஜியை கைது செய்ய திட்டம்; திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கணிப்பு..!
Former DMK Minister Raghupathi predicts that there is a plan to arrest Senthil Balaji before the Chief Minister goes to Karur
''குதிரை பேரம் இங்கே நடந்ததற்கு எந்த ஆதாரமும், அடையாளமுமே கிடையாது. காவல்துறை அங்கே வழக்கு பதிவு செய்ததே முதலில் தவறு. முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு பொய் வழக்கு போட்டுள்ளனர்'' என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது;
குதிரை பேரத்திற்கு எடுத்துக்காட்டு தவெக. 108 என்பதை 120 ஆக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் இலக்கு என்றும், அதற்காக குதிரை பேர அரசியலிலே ஈடுபட்டு வருகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். அத்துடன் ''வாஷிங் பவுடர் நிர்மா''ன்னு ஒரு பாட்டு வரும். அதுபோல ஊழல் கரை உள்ளவங்களுக்கு எல்லாம் வாஷிங் பவுடர் விஜய் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் 2017 லேயே திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியும் என்றும், ஆனால் அதை எங்கள் தலைவர் விரும்பவில்லை. மக்களை சந்தித்துதான் ஆட்சிக்கு வந்தோம். குதிரை பேரத்திற்கு எதிரானதுதான் திமுக என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் தவெகவிற்கு தாவி வருகின்றனர். குதிரை பேரத்திற்கு எடுத்துக்காட்டே தவெகதான் என்றும், மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லுங்கள் நானே அவர்களை வெற்றி பெற வைக்கிறேன் என முதல்வர் விஜய் உறுதியளித்ததாக வைகோவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தவெக தரப்பில் இருந்து குதிரை பேரம், யானை பேரம் என எல்லாம் நடந்துள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று கூறியதோடு, அந்த குதிரை பேரத்தின் மீது தமிழ்நாடு காவல்துறை, லஞ்ச ஒழிப்பு துறை எந்த ஒரு வழக்கும் பதியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், யாரோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் திடீரென்று ஒரு புகார் கொடுக்கிறார். அதன் மீது முழு விசாரணை மேற்கொள்ளாமலேயே நடவடிக்கை தொடங்குகிறது என்றும்,அந்த புகார் அளித்த எம்.எல்.ஏ.வின் பின்புலம் என்ன தெரியுமா? அவர் ஊத்தங்கரை தொகுதியில் சீட் வாங்கவே முறைகேடு செய்ததாக அந்தக் கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர். அதுதான் அவரது தகுதி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனால் அவர் ஒரு கதையை புனைந்து புகாராக கொடுத்துள்ளார் என்றும், அதன் பேரில் திருநாவுக்கரசை கைது செய்து அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றதாக கூறி இன்றைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்தி உள்ளிட்டவர்கள் மீது அவர்கள் ஏவி விட்ட அம்பு பாய்ந்து கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி அவசர அவசரமாக ஒரு புகாரை பெற்று அவர்களுக்கு விருப்பப்பட்ட வாக்குமூலத்தை பெற்று தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் முதல்வர் விஜய் கரூருக்கு போவதற்கு முன்னால் செந்தில் பாலாஜியை கைது செய்துவிட்டு செல்ல வேண்டும் என்கின்ற நோக்கமாக இருக்கலாம் என்றுதான் இன்றைக்கு நினைக்கத் தோன்றுகிறது என்று பேசியுள்ளார்.
எனவே குதிரை பேரம் இங்கே நடந்ததற்கு எந்த ஆதாரமும், அடையாளமுமே கிடையாது என்றும், காவல்துறை அங்கே வழக்கு பதிவு செய்ததே முதலில் தவறு. அதுவும் ஒரு புகார் அடிப்படையிலே விசாரணை கூட செய்யாமல் அவர்கள் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்று விமர்சித்து பேசியுள்ளார்.
English Summary
Former DMK Minister Raghupathi predicts that there is a plan to arrest Senthil Balaji before the Chief Minister goes to Karur