சிவகங்கையில் ரவுடி ஓட ஓட படுகொலை & தவெகவினர் மீது போதைப்பொருள் புகார்... முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பகிரங்க கண்டனம்...!
Rowdy murder Sivaganga drug complaint against Tvk MK Stalin publicly condemns Chief Minister Vijay
தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் தொடர்வதையும், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் பெருகி வருவதையும் சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பிணையில் வெளியே வந்த மதன் என்ற ரவுடி ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள அவர், குற்றவாளிகளைக் கண்காணிப்பதில் காவல்துறை தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு, காவல் நிலையத்தில் பிணைக்கான கையெழுத்தைப் போட்டுவிட்டு வந்த ஒருவர், தனது மனைவியின் கண்முன்னேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

அந்தச் சம்பவத்தின்போதே, பிணையில் வெளிவரும் குற்றவாளிகள் முறையாகக் கண்காணிக்கப்படுகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.ஆனால், குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதைச் சிவகங்கையில் நிகழ்ந்துள்ள மற்றொரு கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. கொலை வழக்கில் கைதாகிப் பிணையில் வெளியே வந்த மதன் என்ற ரவுடி, மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் அலட்சியப் போக்கே இத்தகைய சம்பவங்கள் தொடர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறேன்.இதற்கிடையே, பெருந்துறை அருகே செவிலியர் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஐந்து நாட்களுக்குப் பிறகே அவரது உடல் கண்டறியப்பட்டுள்ளது.
குற்றங்களைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதை உறுதி செய்வதிலும் நிலவும் குறைபாடுகள் கவலை அளிக்கின்றன.தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலும் தலைவிரித்தாடுகிறது. வேதாரண்யத்தில் தவெக ஒன்றியச் செயலாளர் ஒருவர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதே மாவட்டத்தில், பெருமளவில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழகத்தை மாற்ற முயன்றதாகக் குற்றம்சாட்டப்படும் தவெக நிர்வாகி ‘மெத்’ பூபாலனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய்யின் திரைப்படங்களைப் பார்த்து அவரது கட்சியினர் இதைத்தான் கற்றுக்கொள்கிறார்களா? போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து கைது செய்ய மாநிலக் காவல்துறையால் முடியவில்லையா? அல்லது அவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தனை நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்களா? போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால், முதலில் தனது கட்சியினரின் செயல்பாடுகளை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, காவல்துறை முறையாகச் செயல்படுவதையும் அவர் உறுதிப்படுத்த வேண்டும்.
ஆனால், தற்போது நிலைமை என்னவாக இருக்கிறது? காவல்துறைப் பொறுப்பை முதல்வர் பெயரளவில் மட்டுமே வகிக்கிறாரா? மற்ற துறைகளின் பொறுப்புகளை அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளித்ததைப் போல, காவல்துறையின் செயல்பாடுகளையும் வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டாரா?தமிழகத்தில் இடைவிடாமல் அரங்கேறும் அரிவாள் வெட்டுக் கொலைகளும், மத்திய அரசின் விசாரணை அமைப்புகளிடம் சிக்கிவரும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளும் காவல்துறையின் செயல்பாடுகளில் முதல்வர் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதையே காட்டுகின்றன.
முதல்வர் அவர்களே, உங்கள் அலட்சியத்தால் மனித உயிர்கள் பலியாகின்றன. போதைப்பொருட்களை ஒழிப்போம், விளையாட்டை ஊக்குவிப்போம் என்று கூறிய நீங்கள், முதலில் ஓய்வெடுப்பதை விட்டுவிட்டு, உங்களிடம் உள்ள காவல்துறைப் பொறுப்பை முழுமையாகக் கையில் எடுங்கள். தமிழகத்தில் குற்றங்களைத் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Rowdy murder Sivaganga drug complaint against Tvk MK Stalin publicly condemns Chief Minister Vijay