மோசமான சாலைகளில் தான் விபத்துகள் குறைகிறது - பாஜக எம்பி புது விளக்கம்!
road accident bjp mp Telangana
தெலுங்கானா மாநில பாஜக எம்பி விஸ்வேஷ்வர், “நல்ல சாலைகள் விபத்துகளை அதிகரிக்கின்றன” என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: “மோசமான சாலைகள் விபத்துகளை குறைக்கும்; ஆனால் மிகச் சிறப்பான சாலைகள், அதிவேக ஓட்டத்துக்குச் சூழல் ஏற்படுத்துவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. முந்தைய பிஆர்எஸ் ஆட்சிக்காலத்தில் மாநிலம் முழுவதும் தரமான சாலைகள் அமைக்கப்பட்டன. இதுவே இன்று அதிகமான சாலை விபத்துகளுக்குக் காரணமாகியுள்ளது,” என தெரிவித்தார்.
மேலும், அண்மையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் டிப்பர் லாரி ஒன்று அரசுப் பேருந்து மீது மோதியதில் 19 பேர் உயிரிழந்ததை எடுத்துக்காட்டிய அவர், “அந்த விபத்துக்கும் நல்ல சாலை கட்டமைப்பே ஒரு காரணம். சாலை சமனாக இருந்ததால் இரு வாகனங்களும் அதிக வேகத்தில் சென்றன; அதுவே மோதி உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது” என கூறினார்.
அதே நேரத்தில், “மோசமான சாலைகளில் வாகனங்கள் இயல்பாகவே மெதுவாக செல்வதால் பெரிய விபத்துகள் நடைபெற வாய்ப்பு குறைவு” என்றும் அவர் வாதிட்டார்.
இந்த கருத்து வெளிப்பட்டதும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளன. மக்கள் பெரும்பாலும் “சாலை தரத்தை குறைப்பது தீர்வு அல்ல, போக்குவரத்து ஒழுங்கை உறுதிப்படுத்துவதே முக்கியம்” என கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
road accident bjp mp Telangana