உரிமை தொகை + பென்சன்.. சிக்ஸர் அடித்த ஸ்டாலின்! பெண்களை மையமாக வைத்து அடுத்த பெரிய அறிவிப்பு?
Right amount pension Stalin scored a six The next big announcement focusing on women
தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கம், அரசு ஊழியர்களுக்கான புதிய உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS), பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000 வழங்கல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர் நலத்திட்ட அறிவிப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், பெண்களை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு பெரிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக பயன் பெற்று வருவதாக கூறப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. ஆவணங்கள், வருமான விவரங்கள், குடும்ப நிலை உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்ட பின்னர் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் முதல் கூடுதல் பயனாளிகளுக்கும் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அரசு ஊழியர்களுக்கான புதிய உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டமான TAPS-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் படி, அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி அடிப்படை ஊதியத்தின் 50 சதவீதம் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான மூவர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள் தங்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் பங்களிக்க வேண்டும்; மீதமுள்ள தொகையை மாநில அரசே ஏற்கும். இந்த திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக சுமார் ரூ.13,000 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த தொகையும் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், தேர்தலை மனதில் வைத்து பெண்களை கவரும் வகையில் இன்னொரு முக்கியமான நலத்திட்ட அறிவிப்பு பிப்ரவரி தொடக்கத்தில் வெளியாகும் என்றும், பிப்ரவரி கடைசி வாரத்தில் அது நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு நேரடியாக பலன் அளிக்கும் வகையிலான பெரிய திட்டமாக இது இருக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனிடையே, மாதாந்திர மின் கட்டணம் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மாதாந்திர மின் கணக்கீட்டை மீண்டும் கொண்டு வர அரசு தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, படிப்படியாக மாதாந்திர மின் கட்டணம் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
புதிய மின் இணைப்புகளுக்கான காலக்கெடுவையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. வீடுகள் மற்றும் கடைகள் போன்ற தாழ்வழுத்த பிரிவில் விண்ணப்பித்தால், கூடுதல் மின்சாதனங்கள் தேவையில்லாத நிலையில் மூன்று நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மின்மீட்டர் தட்டுப்பாட்டை தவிர்க்க, தமிழ்நாடு மின்சார வாரியம் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர் பட்டியலை வெளியிட்டு, பொதுமக்கள் நேரடியாக மீட்டர்களை வாங்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேல்நிலை கேபிள்கள் உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு அதிக மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) தலையிட்டு, அதிக கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இதுவரை வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை நுகர்வோருக்கு திருப்பிச் செலுத்தவோ அல்லது அடுத்த மின் கட்டணங்களில் சரிசெய்யவோ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அனைத்து நடவடிக்கைகளும், தேர்தலை நோக்கி நகரும் சூழலில், மக்களுக்கான நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்களை மையமாக வைத்து வரவிருக்கும் புதிய அறிவிப்பு, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Right amount pension Stalin scored a six The next big announcement focusing on women