'ஆகஸ்ட் 27-க்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும்'...! - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Response should be filed by August 27 High Court orders CM Vijay
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் முதல்-அமைச்சர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்களை தாக்கல் செய்ய காலக்கெடு விதித்து, தவறினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து, வாக்காளர்களான தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் முதல்-அமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்தனர்.இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணையில் உள்ளன. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், தேர்தல் வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதேபோல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதால், அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
இரண்டு வார கால அவகாசம் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி, தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டியுள்ளது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த விசாரணையின்போதே வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்று தெளிவுபடுத்தியிருந்ததாகவும் நீதிபதி தெரிவித்தார்.இதையடுத்து, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பினருக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை மட்டும் அவகாசம் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் முதல்-அமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
English Summary
Response should be filed by August 27 High Court orders CM Vijay