காரில் வந்த 5 பேர் கும்பல்... மோட்டார் சைக்கிளை மோதித் தடுத்து வெட்டிக்கொலை...! - திருவள்ளூரில் அதிர்ச்சி...!
gang 5 people who came car hit motorcycle and killed it Shock Thiruvallur
திருவள்ளூர் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 33 வயது நபரை, காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் அருகே உள்ள சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்கிற ரூபன் (33), ஒரு குற்ற வழக்கு தொடர்பாக வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
பின்னர் தனது நண்பர் வெங்கடேஷுடன் மோட்டார் சைக்கிளில் தாமரைப்பாக்கம் கூட்டு சாலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், மாரி சென்ற மோட்டார் சைக்கிள் மீது திடீரென காரை மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாரியை அந்த கும்பல் சுற்றிவளைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்த கொடூர சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், படுகாயமடைந்த மாரியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கொலைக்குப் பின்னர் காரில் வேகமாக தப்பிச் சென்ற கும்பல், பாகல்மேடு பகுதியில் சாலையோரத்தில் இருந்த வீட்டின் சுவர் மீது காரை மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து காரில் இருந்த 3 பேரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து வெங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காரில் இருந்த மேலும் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட 3 பேரிடமும் கொலைக்கான காரணம், திட்டமிட்டு இந்த சம்பவம் நடத்தப்பட்டதா, மேலும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் பட்டப்பகலில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
gang 5 people who came car hit motorcycle and killed it Shock Thiruvallur