இடி, மின்னல்... பலத்த காற்று..! 3 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்...! - வானிலை மையம் எச்சரிக்கை...!
Thunder lightning strong winds Heavy rains lash 3 districts today Meteorological Department warns
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,"தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய கீழடுக்கு வளிமண்டலத்தில் வலுவிழந்த காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.
இதன் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.இன்று (25-08-2026): நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்த பிற மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (26-08-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
27-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இருக்காது. 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றாலும், வட உள் தமிழகத்தில் வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும்.
25 மற்றும் 26-ம் தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை ஒட்டியே இருக்கும். 27 முதல் 29-ம் தேதி வரை வட உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவிலேயே நீடிக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கலாம்.
நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகக்கூடும்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
English Summary
Thunder lightning strong winds Heavy rains lash 3 districts today Meteorological Department warns