அதிமுகவில் மீண்டும் சலசலப்பு? அதிமுக இனிமே அவ்ளோ தான்! மாஜிகளுக்கு போனைப் போட்ட சசிகலா? எடப்பாடிக்கு பிரஷர்!
Renewed turmoil in the AIADMK Is it the end of the road for the party Did Sasikala call former ministersPressure mounts on Edappadi
அதிமுகவில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள நிலையில், தற்போது கட்சியில் மீண்டும் செல்வாக்கை ஏற்படுத்தும் முயற்சியில் சசிகலா தீவிரமாக இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் சசிகலா அண்மைக் காலமாக தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், கட்சியின் தற்போதைய நிலை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு அணிகளாகப் பிரிந்தது. ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் தனித்தனி அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடி கே. பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தல் முதல் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாதது கட்சிக்குள் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதும், பல முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு சென்றதும் கட்சியின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
அரசியல் வட்டார தகவல்களின்படி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த சூழலை பயன்படுத்தி, அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் சசிகலா சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அவர்களிடம் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளில், "எனக்கு எந்த அரசு பதவியும் தேவையில்லை. ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக மீண்டும் வலுவான இயக்கமாக உருவெடுக்க வேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் அனைவரும் ஒன்றிணைவது அவசியம். இல்லையெனில் கட்சியின் எதிர்காலம் மேலும் சவால்களை சந்திக்க நேரிடலாம்" என்று சசிகலா வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து கட்சியை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், சசிகலா தரப்பினருடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து அதிமுக தரப்பிலோ அல்லது சசிகலா தரப்பிலோ அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
அதிமுகவில் தொடர்ந்து உருவாகி வரும் இந்த அரசியல் நகர்வுகள், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் எதிர்கால கூட்டணி அரசியலில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
English Summary
Renewed turmoil in the AIADMK Is it the end of the road for the party Did Sasikala call former ministersPressure mounts on Edappadi