புதுச்சேரி புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு: முதல்வர் ரங்கசாமி தலைமையில் 27 பேர் பிரமாணம்; சபை குறிப்பில் இருந்து நேருவின் பேச்சு நீக்கம்!
Puducherry MLAs Take Oath CM Rangasamy Leads 27 Members
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) பதவியேற்பதற்கான சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் இன்று தற்காலிக சபாநாயகர் (Pro-tem Speaker) அன்பழகன் தலைமையில் கூடியது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட மொத்தம் 28 சட்டமன்ற உறுப்பினர்கள் முறைப்படி தங்களது பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
கடந்த மே 4-ஆம் தேதி வெளியான புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இக்கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லோக் ஜனசக்தி (லஜக) 1 இடங்களிலும், எதிர்க்கட்சித் தரப்பில் திமுக 5, காங்கிரஸ் 1, தவெக கூட்டணி 3 மற்றும் சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
கடந்த மே 13-ஆம் தேதி முதலமைச்சராக ரங்கசாமியும், அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பதவியேற்றனர். இத்தேர்தலில் மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் வென்ற முதலமைச்சர் ரங்கசாமி, தனது தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை கடந்த மே 17 அன்று ராஜினாமா செய்ததை அடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9.37 மணிக்குத் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உரையாற்ற, சட்டமன்றக் கூட்டத்தொடர் முறைப்படி தொடங்கியது. கவர்னர் கைலாஷ்நாதனின் உத்தரவைச் சட்டமன்றச் செயலாளர் தயாளன் வாசித்ததைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ-க்கள் வரிசையாகப் பதவியேற்றனர்.
முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரைத் தொடர்ந்து சிவகொழுந்து, ராஜவேலு, நாஜிம், திருமுருகன், ஜான்குமார் உள்ளிட்ட 27 எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சட்டமன்றத்தில் அரங்கேறிய 3 முக்கியச் சம்பவங்கள்:
1. சபை குறிப்பில் இருந்து நீக்கம்: சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தபோது, அரசு தயாரித்திருந்த அதிகாரப்பூர்வப் படிவத்தில் இல்லாத கூடுதல் வாசகங்களை (வரியை) அதிரடியாகக் குறிப்பிட்டுப் பேசினார். இதைக் கவனித்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அவர் பேசிய அந்த கூடுதல் வரிகளைச் சபை குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டார்.
2. தவெக எம்.எல்.ஏ சாய் சரவணகுமார் ஆப்செண்ட்: இன்று நடைபெற்ற இந்த ஒட்டுமொத்தப் பதவியேற்பு விழாவில், திருபுவனை தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ சாய் சரவணகுமார் மட்டும் சில தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை. அவர் மற்றொரு நாளில் சபாநாயகர் அறையில் தனியாகப் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பார்வையாளர் மாடத்தில் கூச்சல் குழப்பம்: எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பதைக் காண அவர்களது குடும்பத்தினர் அதிகளவில் வந்திருந்தனர். ஆனால், சட்டமன்றப் பார்வையாளர் கேலரி (Gallery) சிறியதாக இருந்ததால், அந்தந்த எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்கும்போது மட்டும் குடும்பத்தினர் மாறி மாறி வந்து அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு நிலவிய கூச்சல் குழப்பத்தைத் தணிக்க, சபாநாயகர் தலையிட்டுச் சபை காவலர்களைக் கொண்டு கூட்டத்தை அமைதிப்படுத்தினார்.
English Summary
Puducherry MLAs Take Oath CM Rangasamy Leads 27 Members