மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்குக! -டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Provide immediate compensation to farmers affected by rain TTV Dhinakaran urges
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது,"தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பெய்த கனமழை காரணமாக நெல் சாகுபடி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் என எண்ணற்ற ஏக்கர் நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
காவிரி டெல்டா பகுதியில் கடந்த ஆண்டை விட இம்முறை நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருந்தது. ஆனால் அதற்கேற்றவாறு நெல் கொள்முதல் முன்னேற்பாடுகள் செய்யாதது அரசின் பெரும் தவறாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாகியுள்ளதோடு, நிலத்தில் விளைந்த நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இதன் விளைவாக, விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளது.எனவே, நெல் தேக்கம் ஏற்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
அதோடு, மழைநீரில் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணத் தொகை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Provide immediate compensation to farmers affected by rain TTV Dhinakaran urges