'தமிழகத்தில் உள்ள கோயில் நிலத்தில் வணிக வளாகம் கட்ட கூடாது: சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்'; உயர்நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கோயில் நிலத்தில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகம், குடியிருப்புகள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவை மீறி பல கோயில்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்ட வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனை மறுத்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில்,  முத்துக்குமார சாமி கோயில் இடத்தில் நடக்கும் கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்ட பிறகு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 07 கோடி ரூபாய் செலவில் வணிகவளாகம் கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் மூலம் கோயிலுக்கு மாதம் 07 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பணிகளுக்கு ஏதுவாக அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:

கந்தக்கோட்டம் கோயில் நிலத்தில் நடக்கும் கட்டுமான பணிகளை தொடரலாம். அதே சமயம் அதனை அறநிலையத்துறை சட்டப்படி பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டு தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகம் வரும் நவம்பர் 22-ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் கோயில் நிதியில் இதுபோன்ற வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதனை செயல்படுத்தத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The High Court has ordered a circular to be issued prohibiting commercial complexes from being built on temple land in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->