சொன்ன வாக்குறுதி என்னாச்சு...? - மீனவர்களுக்கு ரூ.12,000 தடைக்கால நிவாரணத்தை உடனே வழங்குங்க! தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி அதிரடி வலியுறுத்தல்...!
Provide 12000 interim relief fishermen immediately SDPI party urges Tamil Nadu government take action
மீன்பிடி தடைக்காலத்தால் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மீனவர் அணி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மீனவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் செய்யது அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"கடலையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான மீனவ மக்கள், தற்போது அமலில் உள்ள மீன்பிடி தடைக்காலத்தால் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடல் வளங்களை பாதுகாக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்தை உறுதிப்படுத்தவும் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் இந்த தடைக்காலம் சுற்றுச்சூழல் ரீதியாக அவசியமானதாயினும், மீனவக் குடும்பங்களின் வருவாய் ஆதாரத்தை முற்றிலும் பாதிக்கும் சூழலை உருவாக்குகிறது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், மீன்பிடி தடைக்காலப் பாதுகாப்பு நிவாரண நிதி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அத்தியாவசிய ஆதரவாக இருந்து வருகிறது.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்று தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தது.
ஆனால் தற்போதைய மீன்பிடி தடைக்காலம் தொடங்கி பல நாட்கள் கடந்துள்ள நிலையிலும், தேர்தல் வாக்குறுதிப்படி உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையை வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாதது மீனவ சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்வு, குடும்பச் செலவுகள், படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சுமைகளை எதிர்கொண்டு வரும் மீனவக் குடும்பங்கள், இந்த நிவாரணத் தொகையை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இருப்பினும், வாக்குறுதி அளிக்கப்பட்ட தொகை இன்னும் அவர்களை சென்றடையாதது ஏமாற்றத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீனவ மக்களின் வாழ்வாதார நலனை கருத்தில் கொண்டு, தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி ரூ.12 ஆயிரம் மீன்பிடி தடைக்காலப் பாதுகாப்பு நிவாரண நிதியை எந்தவித நிபந்தனைகளும் இன்றி, தாமதமின்றி தகுதியுடைய அனைத்து மீனவக் குடும்பங்களுக்கும் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மீனவர் அணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Provide 12000 interim relief fishermen immediately SDPI party urges Tamil Nadu government take action