கரூர் வெண்ணைமலை: கோவில் நில விவகாரம்; அனைத்துக் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்!
protest Karur Vennaimalai Balasubramaniam Swamy Temple
கரூர்: இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) அதிகாரிகளைக் கண்டித்து, கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு முன்பு அனைத்துக் கட்சியினர் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வெண்ணைமலை கோவிலுக்குச் சொந்தமான சுமார் 560 ஏக்கர் நிலங்களில், 1962-க்கு முன் பட்டா பெற்று மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலங்களை மீட்கக் கோரி திருத்தொண்டர் அறக்கட்டளை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். நிலங்களை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதுடன், தாமதமானால் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு முன், கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அறநிலையத் துறை நோட்டீஸ் அனுப்பியது. வாடகை அல்லது குத்தகையைச் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த மாதம் 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் குடியிருப்புகளுக்கும் சீல் வைக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்குச் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால், காலையில் இருந்தே கோவில் முன்பு குடியிருப்போர் குவிந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகக் கரூர் எம்.பி. ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.), தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது சீல் வைக்கவோ, மின் இணைப்பைத் துண்டிக்கவோ கூடாது என்றும், அதிகாரிகள் முற்பட்டால் தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரித்தனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
English Summary
protest Karur Vennaimalai Balasubramaniam Swamy Temple